உயிர் காக்கும் கடம்ப மரம்: கண்டுபிடிப்புக்குகாப்புரிமை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கடம்ப மரத்திலிருந்து கடம்பின் என்ற மருத்துவ குணம் வாய்ந்த உயிர் வேதிப்பொருளை பிரித்தெடுக்கும் முறையை கண்டறிந்ததற்காக இந்திய அரசின் காப்புரிமை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக காப்புரிமையை வழங்கியுள்ளது.

நியோலாமார்க்கியா கடம்பாவிலிருந்து அதிக அளவு கடம்பினை ஈட்டுவதற்கு, பிரித்தெடுப்பதற்கு மற்றும் அளவிடுவதற்குமான புதிய முறை என்ற தலைப்பிலான இந்த கண்டுபிடிப்பை கோபால், செந்தில், வெள்ளைக்குமார் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய ஆராய்ச்சிக் குழு உருவாக்கியுள்ளது.

தமிழ் சங்க இலக்கியத்தில் அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த பழப்பெரும் கடம்ப மரமானது (நியோலாமார்க்கியா கடம்பா), வலி நிவாரணி, அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளுக்காக பாரம்பரிய மருத்துவத்தில் மிகவும் மதிக்கப்படுவதாக இருக்கிறது.

பாரம்பரியமாக, இந்த மரத்தின் மரப்பட்டை காய்ச்சல் மற்றும் தோல் நோய்களை போக்கவும், இலைகள், புண்கள் மற்றும் வயிற்றுப்போக்குக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், இதன் பழம் இயற்கையான ஆக்ஸிஜனேற்றியாகவும், வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.

புதிதாக காப்புரிமை பெற்ற இந்த முறையானது, இந்த சிகிச்சை பண்புகள் பலவற்றிற்கும் காரணமான கடம்ப மரத்தில் உள்ள கடம்பினை பிரித்தெடுக்கவும், அளவிடவும் கண்டறியப்பட்ட புதிய முறையாகும்.

இந்த நெறிப்படுத்தப்பட்ட செயல்முறையானது வெப்பச்சிதைவை தடுப்பதற்காக மரப்பட்டை திசுக்களை உறைதல்-உலர்த்துதல் முறையை பயன்படுத்துகிறது. அதனை தொடர்ந்து ஈர்பொருள் பயன்பாட்டின் | மூலம் அசுத்தங்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. இறுதியான துல்லியமான அளவீட்டிற்கு, வேளாண் பல்கலையின் உயிரித் தொழில்நுட்ப சிறப்பு மையத்தில் உள்ள அதி நவீன திரவ நிறமூர்த்த இயந்திர வசதி பயன்படுத்தப்பட்டது,

இந்த முறையின் மூலம் 94% வரை கடம்பினை நம்மால் பிரித்தெடுக்க முடியும். இது தொடர்பாக நடந்த விழாவில், பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தர் சுப்பிரமணியன் கலந்துக்கொண்டு ஆராய்ச்சிக் குழுவிற்கு காப்புரிமை சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

இதில், முதுகலை படிப்புகள் துறையின் முதன்மையர் பாபு, ஆராய்ச்சிக்குழுவைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர் கோபால், தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரித்தொழில்நுட்ப துறையின் இயக்குனர் செந்தில், தாவர உயிரித்தொழில்நுட்ப துறை பேராசிரியர் வெள்ளைக்குமார் மற்றும் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *