Coimbatore 4 battalion: எஸ்.பி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…!

கோவை அருகேயுள்ள கோவைப்புதூரில் 4வது பட்டாலியன் படை பிரிவு உள்ளது.
இங்கே எஸ்.பி ஆக பணியாற்றி வந்தவர் செந்தில்குமார் (54), இவர் கடந்த 2023ம் ஆண்டில் இருந்து இங்கே பணியில் இருந்துள்ளார். இவர் சில மாதம் முன் பட்டாலியன் பெண் போலீசாருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.
பாதிக்கப்பட்ட பெண் ஏட்டு தப்பி அனைத்து மகளிர் போலீசில் புகார் தந்தார். போலீசார் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த மார்ச் மாகம் செந்தில்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் பணியில் இருந்து செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் கோவைப்புதூர் ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள இவர் வீட்டில் இன்று காலை முதல் இரவு வரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஏஎஸ்பி ராஜேஷ் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக கிடைத்த புகாரின் பேரில் இந்த சோதனை நடந்தது.
இவர் வீட்டில் இருந்து பத்திர பதிவு ஆவணங்கள், சொத்து தொடர்பான இதர ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதிகமாக லஞ்சம் வாங்கி இவர் தங்க நகைகள் வாங்கி குவித்திருப்பதாக கூறப்படுகிறது. பினாமி, உறவினர்கள் பெயரில் சொத்து வாங்கினாரா எனவும் போலீசார் விசாரணை நடத்தினர். சொத்து குவித்தல் தொடர்பாக முதல் கட்ட விசாரணையில் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. பாலியல் விவகாரத்தில் சிக்கிய எஸ்பி சொத்து குவிப்பு விவகாரத்திலும் மாட்டியது கோவை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
