தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மாணவி மர்ம சாவு :உறவினர்கள் புகார்…

விழுப்புரம் விக்ரவாண்டி பகுதியை சேர்ந்த மகாலிங்கம், வாசுகி தம்பதியர் மகள் தாரணிகா (18).
இவர் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.யில் 2-ம் ஆண்டு பிஎஸ்சி அக்ரி படித்து வந்தார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள விடுதியில் தங்கி அவர் படித்து வந்தார். நேற்று காலை விடுதி கழிவறைக்கு சென்ற தாரணிகா மீண்டும் வரவில்லை.
மதியம் கழிவறையில் இருந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அங்கே சென்று பார்த்த போது கழிவறையில் மர்மமான முறையில் தாரணிகா மயங்கி கிடந்ததாக தெரிகிறது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்த போது இறந்து விட்டதாக தெரியவந்தது.
இதுகுறித்து ஆர்எஸ் புரம் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இறந்த மாணவியின் பெற்றோர் கூறுகையில் “எங்கள் மகளுக்கு நோய் பாதிப்பு எதுவுமில்லை. அவர் எங்களுக்கு ஒரே மகள். கவுன்சிலிங் மூலமாக இந்த கல்லூரியில் சேர்ந்தார். விடுதி இருப்பதால் நாங்கள் அனுமதி வழங்கினோம். தினமும் காலையில் 6.30 மணிக்கு கல்லூரி வகுப்புக்கு செல்ல வேண்டும். தினமும் இரவு 3 மணி வரை படிக்க வேண்டியுள்ளது.
அதிகளவு பாடம் படிப்பதற்கு தருகிறார்கள். அதை முடிக்க முடியவில்லை. தூங்குவதற்கு நேரம் போதவில்லை. வகுப்பு சென்றால் தூக்கம் வருகிறது. என எங்கள் மகள் புலம்பினார். நாங்கள் விரைவாக படித்து முடித்து தூங்குமாறு கூறினார். கடந்த மாதம் வீட்டுக்கு வந்த போது நன்றாக தான் இருந்தார். ஆனால் திடீரென அவர் கழிவறையில் இறந்து கிடப்பதாக
கூறியதை எங்களால் ஏற்க முடியவில்லை. அவரது கன்னத்தில், உதட்டில் காயம் இருந்தது. வீக்கம் காணப்பட்டது. விடுதியில் என்னமோ நடந்துள்ளது. அதை மறைக்கிறார்கள். விடுதி நிர்வாகம் சரியில்லை என எங்கள் மகள் ஏற்கனவே கூறியுள்ளார். மகளின் முகத்தை கூட காட்டாமல் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி விட்டார்கள்.
எங்கள் மகள் இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என ஆவேசமாக தெரிவித்தனர். இந்நிலையில் மாணவியின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு இரவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
