டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் டாஸ்மாக் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.
அதன்படி கோவை பீளமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை இன்று டாஸ்மாக் விற்பனையாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாடு அரசை கண்டித்தும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயன்ற ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டம் குறித்து பேசிய டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறுகையில், “கடந்த 23 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். தற்போது அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வு சதவீத அடிப்படையில் அதிகமாக தெரியும். ஆனால் நாங்கள் ஏற்கனவே வாங்கும் குறைவான ஊதியத்துடன் கணக்கிடும்போது ரூ.2 ஆயிரம் அல்லது ரூ.3 ஆயிரம் வரை மட்டுமே ஊதிய உயர்வு ஏற்பட்டுள்ளது.
மாதம் ரூ.15 ஆயிரத்தை வருவாயை வைத்து குடும்பத்தை நடத்த முடியாது. அதேபோல் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்” என்றனர்.
