செம்மொழி பூங்கா பணிகளில் ரூ. 40 கோடி முறைகேடு…!?

தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் செயலாளர் லோகநாதன், தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் கோவை காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா பணிகள் நடக்கிறது. சுமார் ரூ.45 கோடிக்கு திட்டப்பணி மதிப்பீடு தயாரிப்பில் டெண்டர் விடப்பட்டது. ஆனால் பின்னாளில் கூடுதல் மதிப்பீடு என மாநகராட்சி நிதியில் கூடுதல் தொகை ஒதுக்கி பணிகள் நடத்தப்பட்டது.

இந்த மதிப்பீடுகளில் ஒன்றுக்கு இரண்டு மடங்காக விலைப்பட்டியலில் (செட்டியூல் ஆப் ரேட்) இல்லாத பல பொருட்களை பயன்படுத்தி போலியான விலைப்பட்டியல் தயார் செய்து சுமார் 80 கோடி ரூபாய் மாநகராட்சி பணம் செலவிடப்பட்டதாக தெரிகிறது.

இந்த விவரங்களை பொதுப்பணித்துறை, தனியார் வல்லுநர்கள் மற்றும் தணிக்கை அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் பல கோடி ரூபாய்க்கும் அதிகமாக போலி பில்லில் பணம் செலவிடப்பட்ட விவரம் தெரிய வரும். ரோடு போட்டால் 5 ஆண்டுகள் நீடித்து நிலைக்க வேண்டும். 5 ஆண்டு காலத்திற்குள் போட்ட ரோடுகளை திரும்ப போட்டது தொடர்பாக விசாரிக்க வேண்டும்.

ரோட்டின் தடிமன் 50 சதவீதம் குறைத்து 100 சதவீதம் பில் போட்டிருப்பதாக தெரிகிறது.கோவை மாநகராட்சி மற்றும் பல்வேறு அரசுத்துறை திட்டப் பணிகளில் நடைபெற்ற பணிகள் மறு ஆய்வு செய்து அதன் தரம் மற்றும் அளவை சரிபார்த்து தவறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செம்மொழி பூங்காவிற்கு முதலில் தயாரிக்கப்பட்ட மதிப்பீடு எவ்வளவு அதன் பின் தற்போது வரையிலான செலவினம் எவ்வளவு என பார்த்து அதன் முழு உண்மை தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *