கோவை மாநகராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம் 5 கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்…
கோவை மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது இதில் மேயர் ரங்கநாயகி கமிஷனர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டவர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்ட செம்மொழி பூங்கா திட்டப் பணிகளில் சுமார் 40 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. கடந்த ஒரு வாரமாக தணிக்கை ஆய்வு நடை பெற்றது. இதில் பெரும் விதிமுறை மீறல் நடந்திருப்பதை கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் காயத்ரி மேயர் இருக்கை முன்பு நின்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது திமுக கவுன்சிலர்கள் அவரிடம் வாக்குவாதம் செய்தனர். அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்களான பூபதி ராமமூர்த்தி பிரபா சாந்தி ஆகியோரும் சின்னவேடம்பட்டி குளத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என எதிர்ப்பு காட்டி கூச்சலிட்டனர். இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் காயத்ரியின் சேலையை திமுக பெண் கவுன்சிலர்கள் சிலர் இழுத்துள்ளதாக தெரிகிறது.
இதனால் மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேயர் ரங்கநாயகி கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் காயத்ரி உள்பட கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் நான்கு பேர் என மொத்தம் ஐந்து பேரை இரண்டு மாத கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
