சிறுவாணியில் மழை: நீர்மட்டம் உயர்வு
கோவை சிறுவாணி அணையின் மொத்த நீர் தேக்க பரப்பு 22.46 சதுர கிலோமீட்டர் .
அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று அணையின் நீர்மட்ட தேக்க பகுதியில் 32 மில்லி மீட்டர் மழை பெய்தது. அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 50 அடி, தற்போது 22 அடி உயரத்துக்கு நீர்மட்டம் உள்ளது.
மழை தொடர்ந்து பெய்தால் இன்னும் ஒரு மாதத்தில் அணையின் நிரம்ப வாய்ப்பு இருக்கிறது. தற்போது அணையில் இருந்து 6.9 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டாக முழு அளவில் குடிநீர் பெறப்படவில்லை. அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் நீர் எடுக்கும் அளவும் குறைக்கப்பட்டது.
தினமும் 10 கோடி லிட்டர் அளவிற்கு குடிநீர் பெற அனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால் நீர் பற்றாக்குறை காரணமாக 40 முதல் 50 சதவீதம் அளவிற்கு மட்டுமே குடிநீர் எடுக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் உச்சத்தை எட்டினால் மட்டுமே முழு அளவில் குடிநீர் பெற முடியும் என்ற நிலைமை இருக்கிறது. தற்போது அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் முழு அளவில் குடிநீர் பெற வாய்ப்பு உருவாகி வருவதாக தெரிய வந்துள்ளது.
