ஆத்துப்பாலம் மயானத்தில் மனித மண்டையோடு, எலும்புகளை தோண்டி வீசும் அவலம்…

கோவை ஆத்துப்பாலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 6 ஏக்கர் பரப்பிலான மயானம் உள்ளது.

கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மயானம் பயன்பாட்டில் இருக்கிறது. பல ஆயிரம் சடங்கள் இங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இட நெருக்கடியால் இங்கே சடலம் புதைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரிரு நபர்கள் சடலம் அடக்கம் செய்து வருகின்றனர். நீண்ட காலமாக இங்கே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமாதிகள் இருக்கிறது. அடக்கம் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சடங்கு செய்வதால் இவற்றை மாநகராட்சியினர் அகற்றவில்லை.

மயானத்தில் நொய்யல் ஆற்றுக்குள் ஏகப்பட்ட சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டது. அரைகுறையாக புதைக்கப்பட்ட சடலங்களின் மண்டையோடு மற்றும் எலும்புகள் நொய்யல் கரைப்பகுதியில் காணப்படுகிறது. மேலும் சமாதியை தோண்டி சடலங்களின் உடல் பாகங்களை எடுத்து வீசுவதும் வழக்கமாகி விட்டது.

மயானத்தில் குழி தோண்டுபவர்கள் அங்கே கிடைக்கும் உடல் பாகங்கள், எலும்புகள் அனைத்தும் மூட்டையாக கட்டி நொய்யல் ஆற்று புதரில் வீசி விடுகின்றனர். இந்த மூட்டைகள் பல இடங்களில் கிடந்தாலும் இவற்றையும் யாரும் கண்டு கொள்வதில்லை. இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்கள், துணி, மெத்தை போன்றவையும்: ஆற்றுக்குள் கிடக்கிறது.

ஆத்துப்பாலத்தில் சடலம் அடக்கம் செய்தவர்கள் கூறுகையில், “மயானத்தில் இறந்தவர்கள் சடலங்களை புதைக்க இடமில்லை. மின் மயானம் கொண்டு செல்ல அறிவுறுத்துகிறார்கள். ஏற்கனவே மயானத்தில் புதைக்கப்பட்ட பல நூறு சடலங்களை காணவில்லை. குறிப்பாக நொய்யல் கரையோரம் புதைக்கப்படும் சடலங்களை 3 முதல் 6 மாதத்தில் தோண்டி எடுத்து வீசி விட்டு வேறு சடலங்களை அடக்கம் செய்கிறார்கள்.

சிலர் தங்களது முன்னோர் என நினைத்து வேறு சடலத்தின் சமாதியில் சடங்கு செய்யும் நிலை இருக்கிறது. சில நேரங்களில் நொய்யல் ஆற்றில் வெள்ளம் வரும் போது மண் அரித்து உடல் பாகங்களும், எலும்புகளும் மண்ணிற்கு வெளியே வந்து விடும் நிலையிருக்கிறது. நொய்யல் கரையில் 6 அடி ஆழம் குழி தோண்டாமல் 3 முதல் 4 அடி குழி மேதாண்டி மூடி விடுகிறார்கள். நாய்கள் சவக்குழிகளை தோண்டும் அவலமும் இருக்கிறது.

இது அந்த பகுதியில் அசுத்தமான சூழலை ஏற்படுத்துவதோடு பொதுமக்களுக்கு மிகவும் பயத்தை ஏற்படுத்தும் நிலையாக இருக்கிறது. சில நேரங்களில் நொய்யல் ஆற்றில் வெள்ளம் வரும்போது மயானத்தில் வெளியே கிடக்கும் எலும்புகளும் அடித்து செல்லப்படுகிறது. எனவே மயானத்தை ஒட்டியுள்ள நொய்யல் ஆற்றின் கரையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.

ஆற்றுக்குள் சடலங்களை அடக்கம் செய்வதை தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் மீண்டும் மண்ணைத் தோண்டி சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க கூடாது சிவர சமாதி கட்டி வைத்திருந்தாலும் அதை சேதம் செய்து மற்றொரு சடலங்களை அடக்கம் செய்யும் நடைமுறையை தடுக்க வேண்டும்,” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *