கோவையில் ரத்தம் தெளித்து மாந்திரீக பூஜையா… போலீசார் விசாரணை
கோவை கோவில்மேடு ராஜ கோபால் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மர்ம நபர் ஒருவர் ரகசியமாக சென்று ரத்தம் தெளித்து சென்றுள்ளார். அதிகாலையில் வீட்டை திறந்து பார்த்த குடும்பத்தினர் வீட்டின் முன் தெளிக்கப்பட்டிருந்த ரத்தத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக சாயிபாபா காலனி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். ரத்த அபிஷேகம் செய்து மாந்திரீக பூஜை எதாவது நடத்தப்பட்டதா என விசாரித்தனர். மேலும் ரத்தம் தெளிக்கப்பட்ட இடத்தின் அருகே ஆடு, கோழி எதாவது அறுக்கப்பட்டிருந்ததா என ஆய்வு செய்தனர்.
மேலும், தடயவியல் துறையினர் மூலமாக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. ரத்தம் தெளிக்கப்பட்ட வீட்டின் கீழ் மற்றும் அந்த வளாகத்தில் மேலும் 2 வீடுகள் இருக்கிறது. மிரட்டும் நோக்கத்தில் ரத்தம் தெளிக்கப்பட்டதா? இதன் பின்னணியில் உள்ள மர்ம நபர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். அதிக வீடுகள் உள்ள வளாகத்தில் ரத்தம் தெளிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
