ரயிலில் ஓசி பயணம்; 2.19 கோடி ரூபாய் அபராதம்
சேலம் கோட்டத்தில் ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர டிக்கெட் சோதனைகளின் மூலம் ரூ.2.19 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.
சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ரயில்நிலையங்களில் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் சரவணகுமார் வழிகாட்டுதலின் பேரில், சேலம் கோட்ட டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து ஜூலை மாதம் முழுவதும் பல்வேறு ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.
இதில், டிக்கெட் இன்றி பயணம், முறைகேடான பயணம், பதிவு செய்யப்படாத சுமைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவை மீறிய பார்சல்கள் எடுத்து சென்றது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, ஜூலை மாதம் டிக்கெட் இன்றி பயணம் செய்த 11,202 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1 கோடியே 22 லட்சத்து 43 ஆயிரத்து 999 அபராதம் வசூலிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது 18 சதவீதம் அதிகம் ஆகும்.மேலும்
, முறைகேடான பயணம் தொடர்பாக 12,024 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பயணிகளிடமிருந்து ரூ.96 லட்சத்து 32 ஆயிரத்து 623 அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்த ஆண்டைவிட வழக்குகள் 16.2 சதவீதமும், அபராதத் தொகை 74.7 சதவீதமும் அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை 2025-ல் 10,346 வழக்குகளில் ரூ.55 லட்சத்து 12 ஆயிரத்து 828 வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.பதிவு
செய்யப்படாத சுமைகள் அல்லது அனுமதிக்கப்பட்ட அளவை மீறி சுமைகள் எடுத்துச்சென்றது தொடர்பாக 94 வழக்குகள் கண்டறியப்பட்டது. ரூ.43 ஆயிரத்து 392 அபராதம் விதிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டைவிட வழக்குகளில் 54 சதவீதமும், அபராத தொகையில் 36 சதவீதமும் அதிகம் ஆகும். மேலும், ஜூலை மாதத்தில் சேலம் கோட்ட டிக்கெட் பரிசோதகர்கள் மொத்தம் 4,043 சோதனைகள் மேற்கொண்டனர்.இதில்
, 23 ஆயிரத்து 320 விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மொத்தம் ரூ.2 கோடியே 19 லட்சத்து 20 ஆயிரத்து 14 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது.
