கோவை மாநகரில் 940 ரவுடிகள் கண்காணிப்பு…
கோவை மாநகரில் கடந்த ஆண்டு 178 ரவுடிகள் ஆறு மாதங்கள் மாநகரில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டு இருந்தது. நடப்பாண்டில் 57 ரவுடிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அந்த உத்தரவை மீறி மாநகருக்குள் இருந்த ரவுடிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்தகட்டமாக வெளியேற்றப்பட உள்ள ரவுடிகளின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ரவுடிகள், வெளியே நடமாடி கொண்டு இருக்கும் ரவுடிகளை போலீசார் கண்காணித்து அவர்களின் கொட்டத்தை ஒடுக்கி வருகின்றனர். கடந்த ஆண்டு 719 ரவுடிகளை கண்காணித்து வந்த நிலையில் தற்போது 221 ரவுடிகள் உயர்ந்து 940 ரவுடிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கும், சட்டம் ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்தி வரும் ரவுடிகளுக்கு 51ஏ சம்மன் கொடுக்கப்பட்டு கடந்த ஆண்டு 178 பேர் வெளியேற்றப்பட்டனர். நடப்பாண்டில் 57 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அடுத்தக்கட்டமாக வெளியேற்றப்பட உள்ள ரவுடிகளின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. 51ஏ சம்மன் காலம் முடிந்து மாநகரில் நுழைந்த ரவுடிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மாநகரை பொருத்த வரை ரவுடிகள் ஏ பிளஸ், ஏ, பி, சி என பிரிக்கப்பட்டுள்ளனர். கொலை வழக்கு உள்ள ரவுடிகள் ஏ பிளஸ், ஏ என்றும், கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து, அடித்தடி போன்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் பி, சி என பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கோவை வடக்கு சரகத்தில் ஏ பிளஸ் ரவுடிகள் 10 பேரும், ஏ பிரிவு ரவுடிகள் 14 பேரும், பி பிரிவு ரவுடிகள் 117 பேரும், சி பிரிவு ரவுடிகள் 225 பேரும் என 366 ரவுடிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது. அதில் 249 ரவுடிகள் கோவை மாநகரில் இருந்து வருகின்றனர். 46 பேர் தலைமறைவாகவும், 71 பேர் சிறையிலும் இருந்து வருகின்றனர்.
தெற்கு சரகத்தில் ஏ பிளஸ் ரவுடிகள் 3 பேரும், ஏ பிரிவு ரவுடிகள் 10 பேரும், பி பிரிவு ரவுடிகள் 60 பேரும், சி பிரிவு ரவுடிகள் 501 பேரும் என 574 ரவுடிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் 427 ரவுடிகள் கோவை மாநகரில் இருந்து வருகின்றனர். 60 பேர் தலைமறைவாகவும், 87 பேர் சிறையிலும் இருந்து வருகின்றனர்.
இவ்வாறு கோவை மாநகரில் 940 ரவுடிகள் போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். அவர்களில் ஏ பிளஸ் ரவுடிகள் துணை கமிஷனர் கண்காணிப்பிலும், ஏ பிரிவு ரவுடிகள் உதவி கமிஷனர் கண்காணிப்பிலும், பி பிரிவு ரவுடிகள் இன்ஸ்பெக்டர்களும், சி பிரிவு ரவுடிகள் எஸ்ஐ.,க்களும் அவர்களில் செயல்பாடுகளை தொடர்ந்து காண்காணிப்பார்கள்.
கடந்த ஆண்டு 719 ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 221 ரவுடிகள் கூடுதலாக கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர். அதன்படி, 940 ரவுடிகளை போலீசார் தீவிர கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
