கோவையில் முகமூடி அணிந்து நகை பறித்த மாணவன் மாணவி கைது…!

கோவை போத்தனூர் வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (70). இவர், கடந்த 30ம் தேதி வீட்டின் முன்பு தனது உறவினர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, கருப்பு நிற மாஸ்க் அணிந்து வந்த வாலிபர் ஒருவர் அங்குள்ள பல் சிகிச்சை கிளினிக் எப்போது திறப்பார்கள் என கேட்டு பேச்சுக் கொடுத்துள்ளார். மருத்துவரின் வீடு எங்குள்ளது என்றும் கேட்டுள்ளார். சரஸ்வதி, மருத்துவரின் வீடு உள்ள வழியை காட்டிய போது, திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் செயினை பறித்தார். அதில், சரஸ்வதி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை பிடிக்க முயற்சித்த போது அருகில் ஸ்கூட்டரில் தயாராக இருந்த ஒரு பெண்ணுடன் தப்பிச் சென்றார். இதுகுறித்து சரஸ்வதி போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சம்பவ இடம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் தீவிரமாக ஆய்வு செய்து நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இதில், குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரின் பதிவு எண் கண்டு பிடிக்கப்பட்டது.

தொடர் விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்டது திருப்பூரை சேர்ந்த பரணிதரன் மற்றும் அவரது காதலி நெல்லையை சேர்ந்த சிந்து (21) என்பதும், இருவரும் கோவை கே.ஜி.சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு எம்.பி.ஏ ஒன்றாக படித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த பரணிதரன் மற்றும் வெளியே அறை எடுத்து தங்கி இருந்த சிந்து அகிய 2 பேரையும் மடக்கி பிடித்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மூதாட்டி சரஸ்வதியிடம் செயின் பறித்ததை ஒப்பு கொண்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் ஆடம்பரமாக வாழ்வதற்காகவும், பரணிதரனுக்கு இருந்த கடனை அடைப்பதற்காகவும், கார் வாங்குவதற்காகவும் வயதான பெண்களிடம் நகைகளை பறிக்க திட்டமிட்டு நோட்டமிட்டுள்ளனர்.

இருவரும் நகை பறிப்பில் ஈடுபட தங்களது அடையாளத்தை மறைப்பதற்காக மாஸ்க் அணிந்து கைவரிசை காட்டி உள்ளனர். இருவரிடமிருந்தும் 2 செல்போன்கள், முகத்தை மறைக்க பயன்படுத்திய கருப்பு நிற மாஸ்க், வாகனத்தின் பதிவு எண்ணை மறைக்க பயன்படுத்திய கருப்பு நிற டேப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பறிக்கப்பட்ட 4 பவுன் தங்கச் செயின் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து 24 மணி நேரத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *