தவெக ஆட்சி 5 ஆண்டு நடக்காது… எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது
தமிழக முதல்வர் விஜய், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் திறப்பதற்காக மேட்டூர் வந்திருக்கிறார்.. அதை செய்திருக்கிறார். இதை செய்திருக்கிறார்… என்கிறார்கள் ஆனால், எனக்கு எதுவும் தெரியவில்லை. சினிமாவில் சட்டமன்ற காட்சிகள் எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் தமிழக சட்டமன்றம் தற்போது நடக்கிறது.
சட்டமன்றம் நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பில் பார்த்தாலே இது தெரிந்துவிடும். உறுப்பினர்களின் கேள்விக்கு அந்தந்த இலாகா அமைச்சர்கள்தான் பதிலளிக்க வேண்டும் ஆனால், ஒருசில அமைச்சர்கள் மட்டுமே பதிலளிக்கிறார்கள். பெரும்பாலான அமைச்சர்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.
தவெக ஆட்சி பொறுப்பேற்று 110 நாட்கள் ஆகிறது. இந்த 110 நாட்களில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் சீண்டல் என குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது.
ஆட்சி வருவதற்கு முன்பு அதை செய்வோம். இதை செய்வோம்… என்றார்கள். தற்போது எல்லாம் தலைகீழாக நடக்கிறது. ஏற்கனவே, அதிகமான கடன் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், இன்னும் அதிகமான அறிவிப்பை கொடுக்கிறார்கள். இதை எப்படி நிறைவேற்றுவார்கள் என தெரியவில்லை. அப்படியானால், இன்னும் அதிகமாக கடன் வாங்குவார்கள் என்று அர்த்தம்.
கடந்த காலத்தில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கினார்கள். இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நிலைக்காது. அப்படி நிலைத்தால், ரூ. 10 லட்சம் கோடி கடன் வாங்குவார்கள். ஏற்கனவே, மின்சார துறையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டு, ரூ.2 லட்சத்து 48 ஆயிரம் கோடி கடன் என்றார்கள்.
தமிழ்நாட்டில், தவெக ஆட்சிக்கு வந்த பிறகுதான் எங்கு பார்த்தாலும் ஊழல் அதிகரித்துள்ளது. முதல்வர் பெயரை சொன்ன பிறகுதான் அதிகம் லஞ்சம் கேட்கிறார்கள்.
லஞ்ச ஒழிப்பு துறையினர், பல துறைகளில் சோதனை நடத்தி, பல ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்கிறார்கள். அப்படியானால், ஊழல் நடந்துகொண்டுதானே இருக்கிறது. சோதனை செய்த இடத்திலேயே இவ்வளவு இருக்கிறது என்றால், சோதனை செய்யாத இடத்தில் எவ்வளவு இருக்கும். இந்த ஆட்சி, தூய்மையான ஆட்சி இல்லை.
ரீல்ஸ், ரீல் போட்டே வண்டியை ஓட்டுகிறார்கள். ரியல் ஏதுவும் இல்லை. கடந்த காலங்களில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மேட்டூர் அணையை திறந்து வைத்தார். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்கூட அதையே செய்தார். ஆனால் இன்று தனி விமானம் பிடித்து வருகிறார், காஸ்ட்லி முதல்வர். நான் விவசாயி, என் நிலைமை வேறு.
அடுத்த பிரதமர் விஜய் என்று கூறுகிறார்கள். அவர், அமெரிக்க ஜனாதிபதிகூட ஆகலாம். அது அவரது விருப்பம். இந்திய நாட்டின் ஜனாதிபதி ஆகலாம், பிரதமர் ஆகலாம். தமிழகத்தில் ரீல்ஸ், ரீல் விட்டு ஏதாவது செய்யலாம். ஆனால், வடமாநிலங்களில் அது நடக்காது தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் வரட்டும், அப்போது பார்க்கலாம்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு தற்போது நடக்கிறது. இது இன்னும் ஓராண்டு நடக்கும். இதெல்லாம் முடிந்த பிறகுதான் உள்ளாட்சி தேர்தல் வரும் என கருதுகிறேன்.
தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது என்பது அவர்களது போக்கை வைத்து தெரிகிறது. ஆட்சி பொறுப்பேற்று 110 நாட்கள்தான் ஆகிறது. எவ்வளவு போராட்டங்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், விவசாயிகள் பகுதிநேர ஆசிரியர்கள் என பல தரப்பட்ட மக்களும் போராடக்கூடிய நிலை வந்துவிட்டது. விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது.
அரிசி, எண்ணெய், சர்க்கரை, பருப்பு என அத்தியாவசிய பொருட்கள் விலை அனைத்தும் உயர்ந்துவிட்டது. இதை கட்டுப்படுத்த தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
