எஸ்எஸ் குளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம்:7 பேர் மீது வழக்கு

கோவை எஸ்.எஸ்.குளம் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடமும், வில்லங்க சான்று பெற வருபவர்களிடமும் இடைத்தரகர்கள் மூலமாக லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் வந்தது.

இதையடுத்து இந்த அலுவலகத்தில் கூடுதல் எஸ்பி ராஜேஷ் தலைமையில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த மாதம் 27ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 82,500 ரூபாய் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அடுத்தக்கட்ட மேல் விசாரணைக்காக, கோவை மாவட்ட ஆய்வுக்குழு

அலுவலகத்தின் துணை ஆய்வுக்குழு அலுவலரும் வட்டாட்சியருமான சங்கீதா, கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் எஸ்.எஸ்.குளம் சார்-பதிவாளர் அலுவலகத்தின் சார் பதிவாளர் ராஜேஸ்வரி, அரசு சாராத தனி உதவியாளர்கள் ஜோதிபுரத்தைச் சேர்ந்த சந்துரு, சந்திரகுமார், தனி நபர்களான பிஎன் பாளையத்தைச் சேர்ந்த பூபாலன், என்ஜிஜிஓ காலனியைச் சேர்ந்த சகாய பேட்ரிக் ஷாம், அருண்குமார், ஜெயப்பிரகாஷ் ஆகிய 7 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *