விநாயகர் சிலைகள் கரைக்க குளங்களுக்கு லாரி நீர் சப்ளை…!

கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வரும் 14ம்தேதி (திங்கள்) நடக்கிறது. அன்றைய தினம் மாநகரில் பல்வேறு பொது இடங்களில் இந்து அமைப்புகள் சார்பில் 6 அடி முதல் 12 அடி வரை உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

தொடர்ந்து மூன்று நாட்கள் வழிபாடு நடைபெற உள்ளது. அதன்பிறகு, விசர்ஜன ஊர்வலம் நடத்தப்பட்டு அந்தந்த அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட குளங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளது.

மாவட்ட அளவில் சிங்காநல்லூர் குளம், வெள்ளக்கிணறு முத்தண்ணகுளம், குறிச்சி குளம், வெள்ளலூர் குளம் என 22 நீர் தேக்கங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டதால், வறட்சியின் காரணமாக பல குளங்கள் வறண்டு காணப்படுகின்றன.

ஒரு சில குளங்களில் சிறிதளவு தண்ணீர் உள்ளது. அதுவும், சாக்கடை நீர் மற்றும் சகதி கலந்து காணப்படுகிறது. இங்கு சிலைகளை கரைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவை மாநகரின் தெற்கு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் பெரும்பாலும் குறிச்சி குளத்தில் கரைக்கப்படுவது வழக்கம்.

இப்பகுதியில் 400 முதல் 500 சிலைகள் வரை பிரதிஷ்டை செய்யப்படும் என தெரிகிறது. இவ்வளவு சிலைகளையும் இந்த குளத்தில் கரைப்பது என்பது முடியாத காரணமாக உள்ளது. ஆனாலும், முடிந்த வரை சிலைகளை கரைக்க மாநகர போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதற்காக முதல்கட்டமாக குளக்கரையில் சவுக்கு கம்புகள் மூலம் தடுப்பு அரண் அமைத்து வருகின்றனர். இரவில், மின்விளக்கு வெளிச்சம் தேவை என்பதால் அதற்கான ஏற்பாடுகளும் செய்து வருகின்றனர்.

இக்குளத்தின் பெரும் பகுதி காய்ந்து கிடக்கிறது. இங்கே பொக்லைன் மூலமாக 15 அடி ஆழத்திற்கு குழி தோண்டி டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பி வருகிறார்கள்.

மேலும், சிலை கரைக்கும் இடத்திற்கு கட்டை கட்டி பாதுகாப்பு பகுதி உருவாக்கும் பணி நடக்கிறது. முத்தண்ண குளம், சிங்காநல்லூர் குளத்திலும் தனியாக குட்டி குளம் உருவாக்கி அங்கே நீர் நிரப்பும் பணி நடக்கிறது. வறட்சியால் சிலைகள் கரைக்க நீரில்லாத நிலை ஏற்பட்டிருப்பதால் பக்தர்கள் தவிப்படைந்துள்ளனர்.

கடந்த காலங்களில் அதிகளவு நீர் தேங்கிய குளத்தில் சிலைகள் நல்ல முறையில் கரைக்கப்பட்டது. நடப்பாண்டில் இதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதாக இந்து அமைப்பினர் ஆதங்கம் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *