கோவையில் பிரியாணி கடையில் ரூ 11 லட்சம் பொருட்கள் கொள்ளை…

கோவையில் பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.11 லட்சம் பொருட்களை கொள்ளையடித்து சென்ற கட்டி உரிமையாளர் உள்பட 17 பேர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.

கோவை சிங்கநல்லூர் காமராஜர் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (30). இவர், அதே பகுதியில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த ஒரு ஆண்டுகளாக பிரியாணி கடை நடத்தி வருகிறார். இதற்காக பாலமுருகன், கட்டிட உரிமையாளருக்கு ரூ.6 லட்சம் முன்பணம் செலுத்தி உள்ளார். அதனைத்தொடர்ந்து கடையின் உட்புற அலங்கார பணிகளுக்காக ரூ. 18 லட்சம் வரை செலவு செய்துள்ளார். இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது.

அதன் காரணமாக, கடையை காலி செய்யும்படி கார்த்திகேயன் கூறியுள்ளார். இதனால், பாலமுருகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே கட்டிட உரிமையாளர் கார்த்திகேயன், அவரது நண்பர் வக்கீல் லிங்கேஷ்குமார் மற்றும் அடையாளம் தெரியாத 15 பேர் கொண்ட கும்பல் நேற்று அங்கு சென்றது.

இவர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த சுமார் ரூ.11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாகனங்களில் ஏற்றி, கொண்டு சென்றுவிட்டனர் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பாலமுருகன், இதுகுறித்து சிங்கநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் கார்த்திகேயன், அவரது நண்பர் வக்கீல் லிங்கேஷ்குமார் மற்றும் அடையாளம் தெரியாத 15 பேர் உள்பட மொத்தம் 17 பேர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 thoughts on “கோவையில் பிரியாணி கடையில் ரூ 11 லட்சம் பொருட்கள் கொள்ளை…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *