தனியார் பஸ்கள் நாளை முதல் ஸ்ட்ரைக்…

தமிழகம் முழுவதும் தனியார் பஸ்கள் நாளை நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட இருப்பதால், கோவை மாவட்டத்தில் 350 தனியார் பஸ்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வரும் அக்டோபர் 2-ம் தேதி மகளிருக்கான இலவச ‘வெற்றி பயணம் திட்டம் துவக்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ், கூடுதல் பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், இத்திட்டத்தின் காரணமாக தனியார் பஸ்கள் கடுமையான பாதிப்பை சந்திக்கும் நிலை இருப்பதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தனியார் பேருந்துகளிலும் பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும். அதற்கு ஈடாக தனியார் பஸ்களுக்கு மானியம் வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை (30ம்தேதி) நள்ளிரவு 12 மணி வரை தனியார் பஸ்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன.

இதனால், கோவை மாவட்டத்தில் கோலை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு பகுதிகளுக்கு இயங்கி வரும் 350 தனியார் பஸ்கள் ஓடாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவை பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் தனியார் பஸ்கள் இயங்குகின்றன. கோவையில் 350 பஸ்கள் இயங்குகின்றன வரும் அக்டோபர் 2-ம் தேதி தமிழக அரசு, வெற்றிப்பயணம் திட்டத்தில் அனைத்து அரசு பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தை வரவேற்கிறோம். இந்த திட்டத்தில் எங்களையும் இணைத்துக்கொண்டு எங்களுக்கு மானியத்தை அரசு வழங்க வேண்டும்.

இந்த திட்டம் காரணமாக தனியார் பேருந்துகளுக்கு 50 சதவீதம் நஷ்டம் ஏற்படும். தனியார் பஸ்களில் 50 சதவீதம் பெண்கள்தான் பயணிக்கின்றனர். இவர்கள் அரசு பஸ்சுக்கு சென்றால், எங்களால் பஸ் ஒட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும். நாள் ஒன்றுக்கு ஒரு பஸ் மூலம் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரைதான் கிடைக்கும். 90 லிட்டர் முதல் 100 லிட்டர் வரை டீசல் செலவாகும். ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சம்பளம் வேறு.

பஸ்: தேய்மானம் செலவு தனி. இப்படி செலவு போக, மீதமுள்ள சிறிய தொகைதான் எங்களுக்கு கிடைக்கும். இதில், இன்சூரன்ஸ், வரி அனைத்தும் கட்ட வேண்டும். எனவே, அரசின் முடிவால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை இருக்கிறது. 100 ஆண்டு கால தொழில் அழியும் நிலை உள்ளது. எனவே, 29-ம்தேதி நள்ளிரவு 12 மணி முதல் 30-ம்தேதி நள்ளிரவு 12 மணி வரை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். இதனால், அன்றைய தினம் பஸ்கள் இயங்காது. எங்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

4 thoughts on “தனியார் பஸ்கள் நாளை முதல் ஸ்ட்ரைக்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *