கோவையில் 7 FL2 பார்கள் மூடல்…
கோவை மாவட்டத்தில் மனமகிழ்மன்றம் பெயரில் எப்.எல் 2 உரிமம் பெற்று 118 மதுபான பார்கள் செயல்பட்டு வருகிறது.
இதில் கடந்த 5ஆண்டில் அதிகளவு பார்கள் துவக்கப்பட்டதாக தெரிகிறது. சில பார்களில் விதிமுறை மீறல் வெளிப்படையாக நடக்கிறது. குவார்ட்டர் பாட்டில்கள் 30 ரூபாய் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் பார்களில் அடியாட்களை வைத்து மிரட்டுவது பார்களில் இருந்து வெளியேற்றுவது போன்ற செயல்பாடுகளும் நடக்கிறது.
பல்வேறு பகுதிகளில் எப்எல் பார்களில் நடந்த குற்ற செயல்கள், விதிமுறை மீறல்கள் அடிப்படையில் கடந்த 2 மாதத்தில் 7 எப்எல் 2 பார்கள் மூடப்பட்டது. போத்தனூர், நீலாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் 3 பார்கள் மூடி கலால் துறையால் சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக கலால் துறையினர் கூறுகையில்,
” எப்எல்2 பார்களின் மீது அதிக புகார்கள் வருகிறது. சிலர், மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். விதிகளை பெரும்பாலான நபர்கள் பின்பற்றுவதில்லை. அடிக்கடி மோதல்கள் நடப்பதாகவும் புகார்கள் வருகிறது. அடிக்கடி ஆய்வு செய்து வருகிறோம். மேலும் சில எப்எல்2 பார்களின் மீது நடவடிக்கை எடுக்க போகிறோம்.” என்றனர்.
