ரூ.3 கோடிக்கு தங்கம் வாங்கி மோசடி செய்த நகை வியாபாரி கைது

கோவை பெரிய கடை வீதியை சேர்ந்தவர் சர்வேஷ் (40). இவர், அதே பகுதியில் நகைப்பட்டறை வைத்து

நடத்தி வருகிறார். சர்வேஷ் ஆர்டரின் பேரின் ஆபரணமாகவும், தங்க கட்டிகளையும் வியபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் கங்காவதியை சேர்ந்த ஷியாம் ஷேட் (40) என்பவர் சர்வேசுக்கு அறிமுகமாகி உள்ளார். அவர் சர்வேஷிடம் தான் கர்நாடகாவில் தங்க நகைக்கடை நடத்தி வருவதாகவும், தனது கடைக்கு ஆபரணங்கள் மற்றும் தங்ககட்டிகள் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து சர்வேஷ் ஒப்பந்தம் போட்டு கொண்டு ஒன்றரை கிலோ தங்க நகைகளை ஷியாம் ஷேட்டுக்கு கொடுத்துள்ளார். அதேபோல ஷியாம் ஷேட் உறவினர் ஒருவர், அவரது அறிவுறுத்தலின் பேரில் கோவையில் உள்ள மற்றொரு வியாபாரியிடம் ஒரு கிலோ தங்க நகைகளை வாங்கி உள்ளார்.

இவ்வாறு ரூ.3 கோடியே 50 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் வாங்கி பல மாதங்களாகியும் ஷியாம் ஷேட் அதற்கான பணத்தை கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் சர்வேஷ் பெரிய கடை வீதி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து ஷியாம் ஷேட்டுக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பினர்.3 முறை சம்மன் அனுப்பியும் அவர் பதில் அளிக்காததால் பெரிய கடை வீதி போலீசார் 3 பேர் கர்நாடகா விரைந்து சென்றனர். தொடர்ந்து, நகைக்கடையில் இருந்த ஷியாம் ஷேட்டை கைது செய்து கோவை அழைத்து வந்தனர்.

அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் சர்வேசுக்கு ரொக்கமாக பணம் கொடுத்து விட்டதாக

தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கான ஆவணங்களை அவர் காட்டவில்லை. இதனால் போளீசார் அவரை

கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே ஷியாம் ஷேட் மனைவி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில், அவர் சாதாரண உடையில் வந்த 3 பேர் கோவை மாநகர போலீசார் என கூறி எனது கணவரை அழைத்து சென்றனர். அவர்கள் எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை. எனவே, வழக்கு குறித்து விவரங்களை தெரிவிக்க வேண்டும். சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க உள்ளோம் என கூறி உள்ளார். இதனால், கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

One thought on “ரூ.3 கோடிக்கு தங்கம் வாங்கி மோசடி செய்த நகை வியாபாரி கைது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *