கோவை விமான நிலையத்தில் பெண் உள்ளாடையில் 808 கிராம் தங்கம் மறைத்து கடத்தல்

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரூ, ஹைதராபாத், டெல்லி, புனே, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், சார்ஜா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது. இதனால், கோவை விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு தங்கம், வைரம், போதைப்பொருட்கள், வெளிநாட்டு சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் கடத்தி வருவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், கோவை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமான பயணிகளில், ஒருவர் விடாமல் அத்தனை பேரையும் சோதனையிட்டனர். அப்போது, ஒரு பெண் பயணி சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்துகொண்டார்.

அவரை தனியே அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். பெண் காவலர்கள் உதவியுடன் அவரை சோதனையிட்டபோது, உள்ளாடையில் மறைத்து, 808 கிராம் எடையில் தங்க கட்டி கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.15 கோடி ஆகும். அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *