வேளாண் பல்கலை கழகத்தில் நாளை கவுன்சிலிங்…
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் பிரிவு, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 3 இளமறிவியல் வேளாண் பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலுள்ள 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு, இந்த கல்வியாண்டில் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான எண்ணிக்கை 2,516 ஆகவும் மற்றும் இணைப்பு கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீடு 3,051 இடங்கள் என மொத்தம் 4,736 இடங்கள் உள்ளன.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண் பிரிவில் 340 இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மே 6 ம் தேதி முதல் ஜூன் 17-ம் தேதி வரை பெறப்பட்டது. மொத்தம் 26,709 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், தகுதியான 24,435 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன. இவர்களில், 15,757 பேர் பெண்கள்.
இந்நிலையில், இளமறிவியல் படிப்புகளுக்கான மாணவர்களின் தரவரிசை பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. தரவரிசை பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து கொள்ள கடந்த 7-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நாளை (9ம் தேதி) முதல் 15ம் தேதி வரை 7.5 சதவீத இடஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடக்கிறது.
இதையடுத்து, வரும் 17-ம் தேதி விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ |வீரர்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீடு கலந்தாய்வும் நடக்கிறது. பின்னர், 7.5 சதவீத இட ஒதுக்கீடு மாணவர்களுக்கான முதற்கட்ட சான்றிதழ் 20ம் தேதியும், பொதுப்பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 22ம் தேதி முதல் 28ம் தேதி வரையும் நடக்கிறது.
இதையடுத்து, இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட மற்றும் நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்டில் நடக்கிறது. இந்த கலந்தாய்வுகளுக்கு பிறகு செப்டம்பர் 9ம் தேதி கல்லூரி திறக்கப்படுகிறது. தவிர, வேளாண் பட்டயப்படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு வரும் 14, 15 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
மேலும், வேளாண் பல்கலைக்கழக பாடங்கள் தொடர்பான விவரங்களை 9488635077, 9486425076 என்ற எண்களிலும், ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும், வாரநாட்களில் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். அண்ணாமலை பல்கலைக்கழகம் வேளாண் பிரிவு பாடங்களுக்கான விவரங்களை 98657-03537 என்ற எண் மற்றும் agridean2015@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
