கோவையில் இருந்து மும்பைக்கு தினமும் விமான சேவை…
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, புதுடில்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது மும்பைக்கு ஒரே ஒரு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கோவையில் இருந்து மும்பைக்கு தினமும் 2 விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் விமானம் மும்பைக்கு காலை 10.20 மணிக்கு சென்றடையும்.
இதேபோல் மும்பையில் இருந்து இரவு 7.20 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 9.50 மணிக்கு கோவை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கோவையை சேர்ந்த தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “கோவையில் இருந்து மும்பைக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவதன் மூலம், தொழில் மற்றும் வர்த்தக துறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு ஒரே நாளில் பொதுமக்கள் சென்று திரும்பும் வகையில் விமான சேவை கிடைக்கும்” என்றனர்.
