கோவையில் மறியல் போராட்டம் செய்த 700 திமுகவினர் கைது

உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் திமுக மறியல் போராட்டம் இன்று நடந்தது. 700-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் காந்திபுரம் சிக்னல் மற்றும் பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார்.

இதில், பங்கேற்ற திமுகவினர் சாலையில் படுத்து, உருண்டு, தவெக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். போராட்டம் காரணமாக, காந்திபுரம் பிரதான சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய இணைப்பு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனைத்தொடர்ந்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை தூக்கிச்சென்று கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன், துணை செயலாளர் கோட்டை அப்பாஸ், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, திமுக முன்னாள் மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, மாணவரணி மாநில இணை செயலாளர் வி.ஜி.கோகுல் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பாலக்காடு மெயின் ரோடு குனியமுத்தூரில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் அருகே மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பங்கேற்றவர்கள் உதயநிதி ஸ்டாலின் மீது போடப்பட்ட பொய் வழக்கு வாபஸ் பெறகோரியும், அவரை உடனடியாக விடுவிக்க கோரியும் கோஷம் எழுப்பினர். தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், காந்திபார்க், மேட்டுப்பாளையம், சூலூர் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 700-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

2 thoughts on “கோவையில் மறியல் போராட்டம் செய்த 700 திமுகவினர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *