நூற்றாண்டை கடந்த கோவை வனக்கல்லூரி…
கோவை மேட்டுப்பாளையம் ரோடு மேம்பாலம் அருகே கடந்த 1912ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி ஆங்கிலேயர்களால் ‘மெட்ராஸ் பாரஸ்ட் காலேஜ்’ துவக்கப்பட்டது.
கோவை சர்க்கிள் வன பாதுகாவலராக பணியாற்றிய சி.ஐ.எப் லாட்ஜ் என்பவர் இந்த கல்லூரியை துவக்கினார். 195 ஏக்கரில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு வனக்கல்லூரி துவங்கியது. தற்போது இங்கே பல ஆயிரம் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மெட்ராஸ் பாரஸ்ட் காலேஜ் கடந்த 1955ம் ஆண்டில் தென்னக வனசரகர் கல்லூரியாக மாறியது.
தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி மாநிலங்களுக்கு வனசரகர்கள் பயில இந்த கல்லூரி மட்டுமே இருந்தது. இந்தியாவில் வனசரக அதிகாரிகளுக்கான இரண்டாவது கல்லூரி என்ற பெருமை இந்த கல்லூரிக்கு உண்டு. முதல் கல்லூரி டேராடூனில் அமைந்துள்ளது.
வனக்கல்லூரி 100 ஆண்டு விழா கடந்த 20212 ஜூலை 4ம் தேதி நடந்தது. மெட்ராஸ் பாரஸ்ட் காலேஜில் முதல் முறையாக கவுலி பிரவுன் என்பவர் முதல்வராக பணியாற்றினார். இவர் நினைவாகவே, இந்த கல்லூரியை ஒட்டியுள்ள ரோட்டிற்கு கவுலி பிரவுன் ரோடு என பெயர் வைக்கப்பட்டது. இவர் கடந்த 1923ம் ஆண்டு வரை பணியாற்றினார்.
இவரை தொடர்ந்து சி.சி.வில்சன், டபிள்யு.டைசன், சி.ஆர்.எப் வில்லியம்ஸ், ஆர்.சி.ரின்ச், டேவிட், ரான்க்ரி ஆகியோர் முதல்வர்களாக பணியாற்றினர். கடந்த 1939ம் ஆண்டு வரை இந்த கல்லூரியில்
ஆங்கிலேயர் ஆதிக்கம் இருந்தது. கடந்த 1945ம் ஆண்டில் சி.ஆர்.ரங்கநாதன் என்பவர் இந்த கல்லூரியில் முதல்வராக நியமிக்கப்பட்டார். 100 ஆண்டுகளில் 39 பேர் முதல்வராக பணியாற்றியுள்ளனர். 2 பேர் பொறுப்பு முதல்வராக பணியாற்றியுள்ளனர். 100 ஆண்டு பெருமையை எட்டிய அரிய கட்டடங்களில் வனக்கல்லூரி அழியாத புகழை பெற்றுள்ளது. கட்டடம் இன்னும் புதுப்பொலிவு மாறாமல் காட்சியளிக்கிறது. கல்லூரியில் படிக்கட்டுகள் கட்டுமானங்கள் தேக்கு மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது.
பழங்கால கட்டமைப்பை மாற்றாமல் கல்லூரியை பராமரித்து வருகின்றனர். இந்த கல்லூரியில், கடந்த 1912 முதல் 2026ம் ஆண்டு வரை 7000 பேர் படித்து வனசரகர்களாக பதவி பெற்றுள்ளனர். பதவி உயர்வு மூலமாக 300க்கும் மேற்பட்டவர்கள் ஐ.எப் எஸ் ஆக தேர்வு பெற்றுள்ளனர்.
ஆரம்ப காலத்தில் வனசரகர்கள் படிப்பு காலம் 2 ஆண்டாக இருந்தது. 1988க்கு பிறகு 1 ஆண்டாகவும், பிறகு சில ஆண்டு கடந்த ஒன்றரை ஆண்டு படிப்பாகவும் மாற்றப்பட்டது. இதில் வனப்பகுதி சர்வே, வன விலங்கு, தாவரங்கள், மண் அமைப்பு, வன விலங்கு சட்டம், தாவர வளர்ப்பு, வன பொறியியல் என 12 வகையான பாடங்கள் கற்று தரப்படுகிறது.
இது தவிர பாரஸ்டர்களும் 30 நாள் பயிற்சி பெறுகின்றனர். கல்லூரி ஆரம்பித்து 114 ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வனசரகர்கள் இந்த கல்லூரியில் உருவாகியுள்ளனர். நாட்டில் 40 சதவீத வனசரகர்கள் கோவையில் படித்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
