போதை ஊசியால் பரவும் எய்ட்ஸ், எச் ஐவி …!விழிப்புணர்வு கூட்டத்தில் எச்சரிக்கை
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எச்ஐவி. எய்ட்ஸ் நோய் பரவல் தொடர்பாக அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் குழுவினருக்கு நேற்று விழிப்புணர்வு பயிற்சி நேற்று வழங்கப்பட்டது.
இதில், கோவை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சொசைட்டி மேற்பார்வையாளர் அறிவழகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
இதுதொடர்பாக அறிவழகன் கூறியதாவது:
மாவட்ட அளவில், எய்ட்ஸ், எச்ஐவி பரவல் கட்டுப்பாட்டில் இருக்கிறது. போதை ஊசி பழக்கம் தொடர்பாக புகார்கள் வருகிறது. சென்னையில் போதை ஊசி போட்டு எய்ட்ஸ் நோய் பரவியதாக தகவல் கிடைத்துள்ளது. ஒரே ஊசியை பலர் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால் நோய் பாதிப்புள்ளவர்களின் ரத்தம் மூலமாக, இன்னொரு நபருக்கு நோய் பரவல் ஏற்படும். எனவே, ஊசி மூலமாக 100 சதவீதம் நோய் பரவல் வாய்ப்பு இருப்பதால், அதை தவிர்க்க வேண்டும்.
மேலும், மாவட்டத்தில் வெளியூர், வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு தொழில் செய்கிறார்கள். விபசாரத்தை நாடி செல்பவர்கள் பாதுகாப்பற்ற உறவு வைக்கக்கூடாது. அப்படி செய்தால் எச்ஐவி, எய்ட்ஸ் பரவல் ஏற்படும். போதை ஊசி, பாதுகாப்பற்ற உறவு தொடர்பாக விழிப்புணர்வு அதிகளவில் ஏற்பட வேண்டும். இதுதொடர்பாக அனைத்து பகுதி மக்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என இக்கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
