கோவை மாநகராட்சியில் குடிநீர் பஞ்சம் தீருமா…!?
கோவை மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்க வேண்டும்.
குடிநீர் வழங்க அதிக நாட்கள் காத்திருக்க வைப்பதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் பில்லூர் 1, 3 திட்டம், சிறுவாணி, ஆழியாறு, அமராவதி, பவானி, பேரூர் கூட்டு குடிநீர், வடவள்ளி வீரகேரளம் கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி குனியமுத்தூர் கிணத்துக்கடவு குடிநீர் திட்டம் என 13 குடிநீர் திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது.
கடந்த 10 ஆண்டிற்கு முன் ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலமாக 25 லட்சம் பேர் பயன்பெற்றனர். தற்போது பயனாளிகள் எண்ணிக்கை 40 லட்சமாக உயர்ந்து விட்டது. குறிப்பாக பில்லூர் திட்டம் வேகமாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் கட்டன் மலையை குடைந்து குகை பாதை அமைத்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
கோவை மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளான காளப்பட்டி, சரவணம்பட்டி, சின்ன வேடம்பட்டி, கோவில்பாளையம், அன்னூர் வட்டாரங்களில் கூடுதல் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பில்லூர் திட்டம் கோவை மட்டுமின்றி திருப்பூருக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மேலும் பல கிராம பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
மாவட்ட அளவில் பெரும்பாலான பகுதியை பில்லூர் திட்டத்தில் இணைத்து இதை பெரிய நெட்வொர்க் திட்டமாக மாற்ற ஏற்பாடு நடக்கிறது. பில்லூர் 4, 5 போன்ற திட்டங்களை நிறைவேற்ற சாத்திய கூறுகள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. கோவையில் இந்த திட்டம் பூர்த்தி பெற்றதும், திருப்பூரின் பல இடங்களுக்கு பில்லூர் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
பவானி ஆற்றிலும் எவ்வளவு குடிநீர் தேவை என்றாலும் பெற முடியும். தற்போது பவானியில் 6 இடங்களில் ராட்சத மின் மோட்டார் வைத்து குடிநீர் பெற்று சுத்திகரித்து வினியோகம் செய்து வருகின்றனர். கோவை மாநகராட்சியில் விரிவாக்க பகுதிகளில் வீடுகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.
இந்த பகுதியில் ஊராட்சி அளவிற்கு மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. மாநகர அந்தஸ்து இருந்தும் இங்கே வசிக்கும் மக்கள் போதுமான குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர் இந்த பகுதியில் கூடுதல் குடிநீர் வழங்கவேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.
மாவட்ட அளவில், அன்னூர் வட்டாரத்தில் மட்டுமே சற்று குடிநீர் சப்ளை குறைவாக இருக்கிறது. மாநகரில் தனி நபர் குடிநீர் 130 லிட்டர் எனவும், நகராட்சியில் 100 லிட்டர் எனவும், பேரூராட்சி, ஊராட்சிகளில் 70 முதல் 50 லிட்டர் எனவும் தினமும் குடிநீர் வழங்கப்படுகிறது. சராசரியாக 3 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளையாகவேண்டும்.
ஆனால் 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. மாவட்ட அளவில் 2238 குக்கிராம குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் வழங்கவேண்டும். இதில் பல கிராமங்களுக்கு முறையாக குடிநீர் கிடைக்கவில்லை. சில கிராமங்களில் போர்வெல் தண்ணீரை குடிநீராக பயன்படுத்துவதும் நடக்கிறது. குடிநீர் வினியோகத்தை விரைவாக முறையாக வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
