பிளாஸ்டிக் கம்பெனியில் தீ விபத்து
கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இரண்டு தளங்களைக் கொண்ட இந்த நிறுவனத்தில், பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கும் அதிநவீன எந்திரங்கள் மற்றும் டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று இரவு வழக்கம்போல் பணிகள் முடிந்ததும், ஊழியர்கள் குடோன் மற்றும் நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்று விட்டனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில், குடோன் உள்ளே இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்திற்குள் தீ பரவி, கட்டிடம் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்குள் வராமல் மளமளவென்று பரவியது.
இதனால் கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணபதிக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், பீளமேடு, மற்றும் கணபதி ஆகிய 4 தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
சுமார் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், சிறப்புப் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து கொண்டு, தண்ணீரைப் பீச்சி அடித்தும், ரசாயன நுரைகளைப் பயன்படுத்தியும் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனாலும், குடோனில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் எந்திரங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது இந்தத் தீயின் தாக்கம் அருகில் இருந்த ஒரு மாவு மில் பகுதிக்கும் பரவியது. உடனே உஷாரான தீயணைப்பு வீரர்கள் அங்கும் தண்ணீரைப் பீச்சி அடித்து தீயை அணைத்தனர். சில வீடுகளின் கண்ணாடிகள் வெப்பம் காரணமாக உடைந்தது.
அதிர்ஷ்டவசமாக தீ மற்ற வீடுகளுக்குப் பரவாமல் தீணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து குறித்து ஆர்எஸ் புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
படம் சதீஷ்..
தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.
