டாஸ்மாக்கில் தவறு செய்தால் சஸ்பெண்ட் தான்… அமைச்சர் விக்னேஷ் பேட்டி
கோவை சுந்தராபுரத்தில் சிட்கோ தொழில்பேட்டையில் 250க்கும் மேற்பட்ட சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நேற்று தமிழக சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் மதன்ராஜா, மதுவிலக்கு அமலாக்க துறை அமைச்சர் விக்னேஷ் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, இருவரும் பைக்கில் சிட்கோ பகுதியை சுற்றி வந்து அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் விக்னேஷ் பைக் ஓட்ட, அமைச்சர் மதன்ராஜா பின்னால் அமர்ந்து பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் மதன்ராஜா நிருபர்களிடம் கூறுகையில்,” மூலப் பொருட்கள் விலை உயர்வு என்பது இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது அல்ல, அது உலகம் முழுவதும் உள்ள பிரச்சினை. ஈரான் போர் காரணமாகவும் மூலப்பொருட்கள் விலை அதிகரித்தது.
மேலும் இந்த விலை உயர்வு நிலையானது அல்ல, நிச்சயமாக அதுவும் மாறும் தொழிற்சாலைகளுக்கான நிலை கட்டணத்தை குறைப்பது குறித்து மின்வாரியத்துடன் ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் பெண் தொழில் முனைவோர்கள் மற்றும் தொழிவாளர்களுக்காக 10 தொழில் பேட்டைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையில் தங்க நகை தொழில் பூங்கா கட்டுமான பணிகள் குறித்து ஒரு மாதத்திற்கு முன்பு ஆய்வு செய்தேன். இதற்காக ஒதுக்கப்பட்டு உள்ள ரூ.60 லட்சம் போதாது என தொழில்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இதற்காக கூடுதல் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. சிட்கோ தொழில் பேட்டையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் ஆகிவிட்டது அதனால் பல்வேறு இடங்களில் பராமரிப்பு வேலைகள் செய்ய வேண்டி உள்ளது. எனவே இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது” என்றார். மதுவிலக்கு அமலாக்க துறை அமைச்சர் விக்னேஷ் கூறுகையில், “மதுவிலக்கு துறையில் தவறு செய்ததால் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். அதில் பாரபட்சம் காட்டப்படாது.
ஒரு சிலர் டாஸ்மாக் கடைநிலை தொழிலாளர்களிடம் மிரட்டி பணம் பறிப்பதற்காக வீடியோ எடுப்பதாக தொழிலாளர்கள் தரப்பிலிருந்து புகார்கள் வருகிறது. எனக்கு ஏதேனும் அழுத்தங்கள் வருகிறதா? என்று கேட்கிறீர்கள், அது எனக்கு தெரியாது, ஆனால் நல்லது செய்கின்ற பொழுது சும்மா இருப்பவர்கள் அழுத்தங்கள் கொடுக்கத்தான் செய்வார்கள், முடிந்ததை அவர்கள் செய்யட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
