கோவையில் டிரான்ஸ்பார்மர்கள் பற்றாக்குறை…
கோவை மண்டலத்தில் 250 கிலோவாட் திறன் கொண்ட மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்) ஒதுக்கீடு செய்யப்படாததால், புதிய தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு மின் இணைப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் மின் இணைப்பு பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து வட்ட அலுவலகங்களிலும், அவற்றின் கீழ் செயல்படும் பிரிவு அலுவலகங்கள் மூலம் புதிய தொழிற்சாலைகள், குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு மின் இணைப்புகளுக்காக பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர்.
இதற்கான மின் கம்பங்கள் அமைத்தல் உள்ளிட்ட வாரிய பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், 250 கிலோவாட் திறன் கொண்ட மின்மாற்றிகள் இல்லாததால், பணிகள் முடிந்த நிலையிலும் மின் இணைப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான தொழில் நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை தொடங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் கோவை மாநகர் வட்டத்தில் ஏப்ரல் மாதம் வரையிலான காலத்திற்கு மட்டுமே மின்மாற்றிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்பிறகு இதுவரை மின்மாற்றிகள் ஒதுக்கீடு செய்யப்படாததால் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. இதேபோல் கோவை வடக்கு, கோவை தெற்கு, உடுமலை, பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட வட்ட அலுவலகங்களுக்கு உட்பட்ட பிரிவு அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு, மின்வாரிய பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில்,
மின்மாற்றிகள் ஒதுக்கீடு செய்யப்படாததால் மின் இணைப்புகள் வழங்கப்படாமல் உள்ளன. இதனால், புதிய தொழில் நிறுவனங்களை தொடங்க திட்டமிட்டுள்ளவர்கள் மட்டுமின்றி, ஏற்கனவே தொழில் தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ள பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கோவை மண்டலத்தில் புதிய மின் இணைப்புகள் வழங்குவதற்கு தேவையான 250 கிலோவாட்
மின்மாற்றிகளை உடனடியாக ஒதுக்கீடு செய்து, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய இயக்குனர், தலைமைப் பொறியாளர் ஆகியோருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
