கோவையில் போக்குவரத்து விதி மீறல்: 25 கோடி ரூபாய் அபராதம் நிலுவை…!
கோவை மாநகர போலீசார், மாநகரில் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கை, சாலை வசதி மற்றும் வாகன போக்குவரத்து ஆகியவற்றின் அடிப்படையில் சீரான போக்குவரத்திற்காகவும், பொதுமக்களின் எளிதான பயணத்திற்காகவும் பல்வேறு போக்குவரத்துச் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், கோவை மாநகரில் அனைத்து முக்கிய சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படும் இடங்கள் மற்றும் அதற்கான காரணங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர் மேலும், வாகன பெருக்கத்தை கணக்கெடுத்து பொதுமக்களும், வாகன ஒட்டிகளும் எளிதாகவும்.
காலதாமதமின்றியும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைந்தும் செல்வதற்கு வசதியாக முக்கிய சாலைகளில் பல இடங்களில் போக்குவரத்து சிக்னல்களை நீக்கியுள்ளனர். அதற்கு பதிலாக “யூ டேர்ன்” வளைவுகள் மற்றும் ரவுண்டானாக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிக்னல்களில் வெயிலில் நிற்காமலும், தொடர்ந்து செல்லவும் பயனுள்ளதாக ரவுண்டானா, “யூ டேர்ன்” அமைந்திருப்பதால் மக்களிடையே இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்தப்படியாக போக்குவரத்து போலீசார் போக்குவரத்து விதிமீறல்களையும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி அதிவேகம், ஹெல்மேட் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்குவது மதுபோதை, ஒரே பைக்கில் 3 பேர் பயணிப்பது, இன்சூரன்ஸ் புதுப்பிக்காமல் இருப்பது, அதிகபாரம் என பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.
இவ்வாறு கடந்த 2019ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை ரூ.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் 5 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அதிவேகம். ஹெல்மேட், சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்குவது மதுபோதை, ஒரே பைக்கில் 3 பேர் பயணிப்பது, இன்சூரன்ஸ் புதுப்பிக்காமல் இருப்பது, அதிகபாரம் ஏற்றி வருவது என பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களை வாகன தணிக்கையில் போது கண்டு படித்து வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகிறோம்.
இவ்வாறு தினமும் சுமார் 2000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 8 லட்சம் வரை அபராதம் விதித்து வருகிறோம் இதில் ரூ.4 லட்சம் வரை அபராதம் வசூல் செய்யப்படுகிறது. சில நேரங்களில் விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் பணம் இல்லாத காரணத்தால் அபராத ரசிது அவர்களிடம் கொடுக்கப்படும். அதனை அவர்கள், இ-சேவை மையங்கள், வேறு எங்காவது வாகன தனிக்கையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாரிடம் அந்த ரசீதை கொடுத்து அபராதம் செலுத்தலாம்.
சிலர், அபராதம் விதிக்கப்பட்டதை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். அவர்கள் அடுத்த முறை தனிக்கையில் சிக்கும் போது முந்தைய அபராதம் வசூலிக்கப்படும். அதேபோல அதிகமான அபராத சலான் கொண்டவர்களில் விவரம் சேகரிக்கப்பட்டும் அவர்களிடம் இருந்து அபராதம் வசூலுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கடந்த 2019ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை நிலுவையில் ரூ. 25 கோடி அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதில் 5 சதவீதம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள அபராத தொகையை பெட்ரோல் பங்க மற்றும் வாகன இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
