நீரின்றி காய்ந்து கிடக்கும் கோவை குளங்கள்…

கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் கோடை மழை சராசரியை விட குறைவாக பெய்தது. கோடை மழையின் சராசரி அளவு 152மி.மீ என்ற நிலையில், நடப்பாண்டில் கோடை மழை 132 மி.மீ பதிவானது. இது கடந்த ஆண்டுகளில் பதிவான கோடை மழையை விட மிக குறைவாகும்.

மேலும், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும். நடப்பாண்டில், தென்மேற்கு பருவமழையின் சராசரி மழையான 210மி.மீ மழையில் 178 மி.மீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வரை 50 சதவீதம் கூட மழை பெய்யவில்லை.

இதற்கு எல்நினோ காரணமாக கூறப்படுகிறது. பருவமழை சரிவர பெய்யாத காரணத்தினால் சிறுவாணி, பில்லூர் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. தவிர, நொய்யல் ஆறு, குளம் குட்டைகள் வறண்டு காணப்படுகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம், சிங்காநல்லூர் குளம் போன்ற குளங்களில் மழை மற்றும் கழிவுநீர் காரணமாக தண்ணீர் உள்ள நிலையில் சொட்டையாண்டி குட்டை கோளராம்பதி கங்கநாராயணா சமுத்திரம், பேரூர் பெரியகுளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டு கிடக்கிறது.

இந்த குளங்கள் வறண்டுள்ள நிலையில், குளத்தில் உள்ள மீன்கள், நத்தை, இரட்டையோடு மெல்லுடலி என அழைக்கப்படும் நன்னீர் குளங்களில் வாழும் கிளிஞ்சல் பாதிக்கப்பட்டுள்ளனர். பேரூர் பெரிய குளத்தில் வறட்சி மற்றும் வெப்ப அழுத்தம் காரணமாக சேற்றில் இருந்த லட்சக்கணக்கிலான கிளிஞ்சல்கள் உடைந்து காணப்படுகிறது. தவிர, மழை இல்லாத காரணத்தினால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு போக கூட இடமில்லை என கால்நடை வளர்ப்போர் புலம்பி வருகின்றனர்.

இது குறித்து கால்நடை மேய்ப்பவர்கள் கூறுகையில், “ஆடு, மாடுகளை குளக்கரையில் மேய்ப்பது வழக்கம். பருவமழை காலங்களில் குளக்கரை, தோட்டங்கள், பயன்படுத்ததாத இடங்களில் பச்சை புற்கள் உள்ளிட்ட கால்நடை தீவனங்கள் அதிகளவில் இருக்கும். அதிகளவில் தீவனம் கிடைக்கும் இடத்தில் கால்நடை பட்டி அமைத்து அங்கேயே இருப்போம். ஆனால், தற்போது பல கிலோ மீட்டர் சென்றால் கூட

கால்நடைகளுக்கான தீவனங்கள் கிடைப்பதில்லை. மேய்ச்சலுக்கு கூட இடமில்லாத நிலையை இந்த பருவமழை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *