சிங்காநல்லூர் உழவர் சந்தையில் வியாபாரிகள் விவசாயிகள் போராட்டம்

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகளும், சந்தையில் கூடுதல் விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்வதாக வியாபாரிகளும் கூறி தொடர் பிரச்னையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை திருச்சி சாலை சிங்காநல்லூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் 150-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கோவையின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறி, பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை விவசாயிகள் உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், உழவர் சந்தை முன்பு ஒரு சிலரால் ஆக்கிரமிப்பு கடைகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் தங்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் வியாபாரிகள் தரப்பில் புகார் எழுந்தது. இந்த கடைகளை அகற்றக்கோரி சிங்காநல்லூர் போலீஸ் நிலையம், வேளாண் இணை இயக்குனர் அலுவலகம். கலெக்டர் அலுவகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

இதையடுத்து சிங்காநல்லூர் உழவர்சந்தையில் விவசாயிகள் கடந்த வாரம் முதல் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை விவசாயிகள் உழவர் சந்தை நுழைவு வாயிலில் தக்காளி பெட்டிகள் மற்றும் காய்கறிகளுடன் அமர்ந்து ஆக்கிரமிப்பு கடைகள் முழுவதையும் அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் வேளாண் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், உழவர் சந்தையின் பின்புறம் கடைகளை அமைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து, உழவர் சந்தை அலுவலர் பிரவீனா, போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், 100 மீட்டரை தாண்டி வெளி வியாபாரிகளின் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் கொண்டு சென்று வைத்தனர். மேலும், உழவர் சந்தையின் முன்பு இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

இது குறித்து வெளி வியாபாரிகள் கூறுகையில்,”உழவர் சந்தையில் விவசாயிகள் மட்டும் விற்பனை செய்ய வேண்டும். ஆனால், ஒட்டன்சத்திரத்தில் இருந்து வியாபாரிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தவிர, விலைப்பட்டியலை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். நாங்கள் பல ஆண்டுகளாக இதே பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம்.

எங்களை உழவர் சந்தை கட்டிடத்தின் 100மீ தூரத்தில் சென்று கடையை வைக்க கூறுகின்றனர். உழவர் சந்தையில் விவசாயிகள் என்ற பெயரில் வியாபாரிகள் தான் அதிகம் இருக்கின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் எங்களின் வியாபாரம் பாதிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர்” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *