வரப் போறது15 பேர் அதிமுக எம் எல் ஏக்கள் என சொல்லவில்லை… அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோவையில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விமான நிலை வளாகத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,”தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதற்கு முதல்வரின் ஒப்புதலோடு தேவையான அளவிற்கு 14,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதில், அரசு அலுவலர்கள் மட்டுமன்றி, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, 250 படகுகளும் அவற்றுடன் மீனவர்களும் முழு தயார் நிலையில் உள்ளனர்” என்றார்.

சுமார் 13 கோடி வாக்காளர்கள் விடுபட்டுள்ளதாகக் கூறி எஸ்ஐஆர் விவகாரத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்த கேள்விக்கு, இது தொடர்பாகத் துறை ரீதியாக விரிவாக ஆய்வு செய்து உரிய பதில்கள் அளிக்கப்படும் என்றார்.

அதிமுகவிலிருந்து 15 எம்எல்ஏக்கள் அந்த கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணையவுள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “15 பேர் வருவார்கள் என்றுதான் கூறினேனே தவிர, 15 அதிமுக எம்எல்ஏக்கள் வருவார்கள் என்று எந்த இடத்திலும் நான் குறிப்பிடவில்லை.

அவ்வாறு நான் கூறியதாக ஏதேனும் ஆதாரம் இருந்தால் சுட்டிக்காட்டட்டும் அவர்களாகவே ஒன்றை உருவாக்கிக் கொள்வதற்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது; இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும் என்றார்.

மேலும், உலகத்தை சில தலைவர்கள் வென்று காட்டியிருக்கிறார்கள், ஆனால் காலத்தை யாராலும் வெல்ல முடியாது அந்த காலத்தையே வென்று காட்டியவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தான் என்றார். அதிமுகவினர் குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகள் குறித்து கேட்டபோது, அவர்களுக்கு இதுவே வாடிக்கையாக போய்விட்டது, மக்களுக்கு விரைந்து சென்று பணியாற்ற வேண்டிய இந்த முக்கிய நேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கெல்லாம் பதில் கூறி நேரத்தை விரயம் செய்ய விரும்பவில்லை என்றார்.

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது அதிமுகவின் இரு பிரிவுகளிடமும் கேட்க வேண்டிய கேள்வியே தவிர தன்னிடம் கேட்க வேண்டியது. அல்ல என தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது ஒரு வகையில் தனக்கு செய்த நன்மையே என்றும், அங்கிருந்து நீக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று அமைச்சராகியிருக்க முடியாது என்றும் தெரிவித்தார். மேலும், தன்னை தாங்கி பிடித்து இன்று அமைச்சராக்கி அழகு பார்க்கும் கழகத் தலைவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

One thought on “வரப் போறது15 பேர் அதிமுக எம் எல் ஏக்கள் என சொல்லவில்லை… அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *