கோவையில் நீர் குட்டை அழிக்கப்படுவதாக புகார்

கோவை மணியகாரம்பாளையத்தில் இருந்து உடையாம்பாளையம் செல்லும் வழியில் சுப்பநாயக்கன்புதூரில் உள்ள நீர்பிடிப்பு குட்டை காணவில்லை என்று விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய புகார் மனுவில், “சுப்பநாயக்கன்புதூர் கிராமத்தில் 2.70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குட்டையை இருந்தது. இந்த குட்டையை கடந்த 2022-23ம் ஆண்டில் கோவை மாநகராட்சி நிர்வாகம் ரூ.8 லட்சம் செலவில் தூர்வாரி, குட்டையை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் அறிவிப்பு பலகையும்: வைக்கப்பட்டது.

தற்போது இந்த குட்டையில் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை பணியில் ஈடுபடும் ஒப்பந்ததாரர் மண்ணைப்போட்டு நிரம்பி சுமார் 2 ஆயிரம் சதுர அடிக்கு தகர கொட்டகை அமைந்துள்ளனர். அங்கு பாதாள சாக்கடை பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் தங்கியுள்ளதாக தெரிகிறது,

மேலும் குட்டை இருந்த பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் குழாய்களை போட்டு வைத்துள்ளனர். இதனால் நீர்பிடிப்பு குட்டை குடியிருப்பு பகுதிபோல காட்சியளிக்கிறது. மேலும் இங்குள்ள தகர கொட்டகைக்கு மின்வாரியத்தினர் மின் இணைப்பும் வழங்கியுள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் குட்டை இருக்கும் இடத்தை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்ய வாய்ப்புள்ளது.

ஏற்கனவே நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. எனவே உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி அங்கு குட்டையில் போட்டுள்ள மண்ணை தூர்வாரி சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும், என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *