காருக்குள் சிக்கிய சிறுவன் பரிதாபமாக சாவு
கோவை சிறுமுகையை அடுத்துள்ள பெத்திக்குட்டை – இரும்பறை சாலையில் வசித்து வருபவர் வேலுமணி(38). இவர் மனைவி சுமதி (35). இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும் 9 வயதில் முகுந்த் என்ற மகனும் உள்ளனர். மகள் 9 ஆம் வகுப்பும், மகன் முகுந்த் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
வேலுமணி இரும்பறை ஊராட்சியில் குடிநீர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். காலை வேலுமணி பணிக்கு சென்று விட்ட நிலையில் அவரது மனைவி சுமதி அருகில் இருந்த உறவினர் இல்லத்திற்கு சென்றுள்ளார். மகளும் பள்ளிக்கு சென்றுள்ளார்.
வீட்டில் பாட்டியும் சிறுவனும் மட்டுமே தனியே இருந்துள்ளனர்.பாட்டி வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கி விட்டார். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் சிறுவன் முகுந்த் உள்ளே ஏறி விளையாடி கொண்டிருந்துள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக காரின் கதவு தானாக மூடிக்கொண்டுள்ளது. பாட்டியும் உறங்கி கொண்டிருந்ததால் சிறுவன் காரில் சிக்கியது தெரியவில்லை.
சற்றுநேரத்தில் வீட்டிற்கு வந்த சுமதி பார்த்த போது காருக்குள் சிறுவன் முகுந்த் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிறுமுகையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் அங்கிருந்த மருத்துவர்கள் அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். முகுந்த் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் . ஆனால் அதற்குள் அவர் இறந்து வட்டார். இது தொடர்பாக சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
