convict treatment: கோவை ஜி. எச்சில் கைதிகள் வார்டு ரொம்ப மோசம்…
கோவை அரசு மருத்துவமனையில் சிறை கைதிகள் சிகிச்சைக்காக தனி பிரிவு (கான்விக்ட் வார்டு) அமைக்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த வார்டு பழுதாகி கிடக்கிறது. பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கு ஒதுக்கப்பட்ட ஒய்வறை கழிவறையை விட மோசமான நிலையில் இருக்கிறது. இந்த அறையை போலீசார் பயன்படுத்த தயக்கம் காட்டி வருகிறார்கள். கைதிகள் வார்டு நவீன பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்க நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
கைதிகள் அடிக்கடி தப்பி செல்வதால், சிறையில் உள்ளது போல் வார்டிலும் பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும். வார்டில் சிகிச்சை பெறும் கைதிகளை கண்காணிப்பு கேமராவிலும் தொடர்ந்து கண்காணிக்க வசதி செய்ய வேண்டும். சிறை அலுவலகத்துடன் இந்த கேமரா காட்சி பதிவுகளை இணைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கைதிகள் வார்டில் அடிப்படை வசதிகள் குறைவாக இருக்கிறது. கோவை மத்திய சிறையில் 1900க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில் நீண்ட காலம் சிறையில் உள்ள வயதான தண்டனை கைதிகள் சிலர் உடல் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிகிச்சை வசதிகள் கேட்டும் சிறை நிர்வாகம் போதுமான உதவியை செய்யவில்லை.
கோவை மத்திய சிறையில் கைதிகள் வார்டு அவலமாக இருப்பதால் 10க்கும் குறைவான கைதிகளுக்கு மட்டுமே சிகிச்சை பெற அனுமதி கிடைப்பதாக தெரிகிறது. அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டை மேம்படுத்தி கைதிகளுக்கு பாராபட்சமின்றி சிகிச்சை வழங்க வேண்டும். பாதுகாப்பு திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
