கோவையில் மூதாட்டி கொலை குற்றவாளியை பிடிக்க போலீசார் தனிப்படை…
கோவை பாப்பநாயக்கன் பாளையம் கருப்புக்கால் தோட்டத்தை சேர்ந்தவர் சாந்தி (58).
இவரது கணவர் கிருஷ்ணன் இறந்து விட்டார். இவர்களுக்கு ராஜா (35) என்கிற மகனும், அமுதா (30) என்கிற மகளும் உள்ளனர். மகள் அமுதா திருமணமாகி பாலக்காட்டில் வசித்து வருகிறார்.
சாந்தி மகன் ராஜாவுடன் தங்கிருந்து அதே பகுதியை சேர்ந்த டாக்டர் ஒருவர் வீட்டில் சமையல் வேலை செய்து வந்தார். ராஜா வெல்டிங் ஓர்க் ஷாப் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை ராஜா வேலைக்கு சென்று விட்டார். அதேபோல் சாந்தியும் வேலைக்கு சென்றதாக தெரிகிறது.
மதியம் வீடு திரும்பிய சாந்தி மீண்டும் இரவு வரை வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது சாந்தி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். இதில், சாந்தியின் தலையில் 4 இடங்களில் தாக்கிய பலத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது. அருகில் மரக்கட்டை ஒன்றும் இருந்தது அதனை போலீசார் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினர்.
தொடர்ந்து போலீசார் சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தடயவியல் பிரிவினர் மோப்பநாய் உதவியுடன் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையே போலீஸ் சோதனையில் வீட்டிலிருந்து நகை, பணம் ஏதும் திருட்டு போகாததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து கொலைக்கான காரணம் என்ன? வீட்டிற்கு யாராவது வந்தார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பாப்பநாயக்கன்பாளையம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வருகின்றனர்.
கோவையில் கடந்த 3ம் தேதி பீளமேடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்னையை சேர்ந்த நவீன் (25) என்பவரும், 6ம் தேதி கிணத்துக்கடவில் அஸ்வின் (22) என்பவரும், 10ம் தேதி செட்டிப்பாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமுதன் (19) என்பவரும் கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று சாந்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் 11 நாட்களில் 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
