கோவையில் வாலிபர் கொலை இரண்டு பேர் கைது

வேலை பறிபோன ஆத்திரத்தில் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொன்ற உடுமலை, மடத்துக்குளத்தை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிகுமார் (26). இவர் தனது உறவினர் கர்நாடகாவை சேர்ந்த கணேஷ் பாண்டி (36) என்பவரை சந்திக்க கோவை வந்துள்ளார். கணேஷ் பாண்டி கோவை ரத்தினபுரி நாராயணசாமி லே அவுட் பகுதியில் தங்கிருந்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று ரவிகுமார் வெரைட்டி ஹால் ரோடு, தலைமை தபால் நிலையம் அருகே கணேஷ் பாண்டியை சந்தித்து பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உடுமலையைச் சேர்ந்த அபிஷேக் (22) மற்றும் அவரது நண்பர் மடத்துக்குளத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (22) ஆகியோர் திடீரென கணேஷ் பாண்டியிடம் தகராறில் ஈடுபட்டனர்.

அவர்களில் அபிஷேக், தன்னை பணியில் இருந்து நீக்க, நீ தான் காரணம் என கூறி கணேஷ் பாண்டியை தகாத வார்த்தைகளால் திட்டி, சரமாரியாக தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரவிகுமார், உடனடியாக கணேஷ் பாண்டியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து ரவிகுமார் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கணேஷ் பாண்டியை தாக்கிய அபிஷேக் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இந்த

நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேஷ் பாண்டி இன்று காலை திடீரென பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, கணேஷ் பாண்டிக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்துள்ளது. அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோனை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அவர் அதனை கண்டு கொள்ளாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும், கடந்த சில நாட்களாக அவர் மருந்து எடுத்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

ஆனாலும், அவரது இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் தாக்கியதில் இறந்தாரா? அல்லது உடல் நிலை சரியில்லாமல் இறந்தாரா? என்பது தெரியவரும். அதன் பின்னர் வழக்கு மாற்றப்படும், என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *