கோவையில் திருநங்கையை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, மருதபட்டியை சேர்ந்த தினேஷ் கந்தசாமி (35). பி டெக் படித்த இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து, பின்னர் ஆன்லைன் பணிகளை செய்து வந்தார். இவர் கடந்த 20.09.2023ம் தேதி கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தனது தந்தையின் இருசக்கர வாகனத்தில் மாலை 445 மணிக்கு வந்தார்.
மருதமலை அடிவாரத்தில் உள்ள அன்னை இந்திரா நகர் போகும் ரோட்டில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருநங்கை மாசிலா மணி என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் தினேஷ் கந்தசாமி கடும் கோபமடைந்தார். அவருக்கு மாசிலாமணியை கொலை செய்ப வேண்டும் என்ற எண்ணம் உருவானது. கடந்த 29.01.2024ம் தேதி இரவு 7.15 மணிக்கு மாசிலாமணியின் வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்தார்.
பின்னர் தன்னிடமிருந்த கத்தியால் அங்கு படுத்திருந்த திருநங்கை தனலட்சுமி என்பவரை மாசிலாமணி என தவறாக நினைத்து குத்தி கொலை செய்தார். பின்னர் அவர் தப்பியோடி விட்டார். இச்சம்பவம் தொடர்பாக வள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கில் தினேஷ் கந்தசாமி கைது செய்யப்பட்டார்.
வழக்கின் மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கோவை பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் குற்றம் சாட்டப்பட்ட தினேஷ் கந்தசாமிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
