கோவை மாவட்டத்தில் செங்கல் சூளைகள் ஆரம்பிக்க தடை…
கோவை மாவட்டத்தில் செங்கல் சூளைகள் நடத்த கடும் தடை நீடிக்கிறது. செங்கல் உற்பத்தியில் முதன்மை இடத்தில் இருந்த கோவையில் ஒரே ஒரு செங்கல் சூளை தான் இருக்கிறது.
கோவை மாவட்டத்தில் செம்மண் வளம் மிகுதியாக காணப்படுகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், எட்டிமடை பகுதியில் செம்மண் பூமி காணப்படுகிறது. கடந்த காலங்களில் இங்கே செங்கல் சூளைகள் அதிகமாக காணப்பட்டது. தடாகம் பகுதியில் 187 செங்கல் சூளைகள் இயங்கியது.
முறைகேடாக மேலும் சில சூளைகள் இயங்கியது. செம்மண் எடுத்தல், சூளை அமைத்தல் போன்றவற்றில் பல ஆண்டாக நடந்த முறைகேட்டை தொடர்ந்து மொத்த சூளைகளும் மூடப்பட்டது. இதேபோல் கோவை தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் கோவனூர் பகுதியில் நாட்டு செங்கல் சூளைகள் இயங்கி வந்தது. இந்த செங்கல் சூளைகள் மலையக பாதுகாப்பு குழும அனுமதியின்றி, விதிமுறை மீறி செம்மண் எடுத்து செங்கல் சூளைகள் நடத்தி வருவது தெரியவந்தது.
இவற்றை மாவட்ட கனிம வளத்துறையினர் கடந்த ஆண்டு மூடி சீல் வைத்தனர். இந்த செங்கல் சூளைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலில் ஈடுபட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இந்த செங்கல் சூளைகள் கடந்த 25 ஆண்டிற்கு மேலாக இயங்கி வந்துள்ளது.
மலைப்பகுதி கிராமங்களில், நீரோடைகள் உள்ள பகுதியில் தரமான செம்மண் எடுத்து இந்த சூளைகள் இயங்கி வந்துள்ளது. தடாகம், சோமையம்பாளையம், சோமையனூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிய 185 செங்கல் சூளைகள் மூடப்பட்டதை தொடர்ந்து கோவனூர் செங்கல் சூளைகளுக்கு மவுசு ஏற்பட்டது.
இங்கே இயங்கி நாட்டு சூளைகளின் மூலமாக தினமும் சுமார் 350 லோடு செங்கல்கள் தயாரிக்கப்பட்டது. தடாகம் பகுதியில் இயங்கிய சில செங்கல் தயாரிப்பாளர்கள் கோவனூரில் தங்களது ஆதிக்கத்தை காட்ட துவக்கினர். இங்கே விதிமுறை மீறல் அதிகமானதை தொடர்ந்து கோவனூர் வட்டார நாட்டு செங்கல் சூளைகள் அதிரடியாக மூடப்பட்டது.
இங்கே செங்கல் சூளைகள் நடத்த கூடாது. செம்மண் வெட்டி எடுக்க கூடாது என கடந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மலையக பாதுகாப்பு குழுமத்தின் (ஹாகா கமிட்டி) அனுமதி பெற்று, நாட்டு சூளைகளுக்கான சட்ட விதிகளின் படி அனுமதி பெற்று இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடாகம் பள்ளத்தாக்கை தொடர்ந்து கோவனூர் வட்டார சூளைகள் மூடப்பட்டதால், கோவை மாவட்டத்தில் செங்கல் கிடைப்பது அரிதாகி விட்டது. தற்போது மாவட்ட அளவில் மேட்டுப்பாளையத்தில் ஒரே ஒரு செங்கல் சூளை முறையாக இயங்குவதாக தெரிகிறது. வேறு எங்கும் சூளைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
முறையான அனுமதி பெற்று செங்கல் சூளைகள் நடத்தலாம். ஆனால் இதற்கான கட்டமைப்பு, வழிவகை செய்யாமல் இருப்பதால், கல் குவாரிகளை மட்டுமே கனிம வளத்திற்கு நம்பி இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. செங்கல் சூளைகள் மொத்தமாக அழிக்கப்பட்டதால் செங்கல் கட்டுமானங்கள் கோவையில் வெகுவாக குறைந்து வருகிறது.
இது இயற்கையான பசுமை கட்டடங்களை உருவாக்காமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. செம்மண் எடுத்தல், சூளை அமைத்தல் தொழில் மறுபடியும் முறையான அனுமதியின் பேரில் துவங்க வேண்டும் என கட்டுமான துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.
