கொடிசியாவில் புத்தக கண்காட்சி
கோவை கொடிசியாவில் ஆண்டு தோறும் புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது .
இந்த ஆண்டுக்கான புத்தக கண்காட்சி வரும் வெள்ளி துவங்கி 26ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இது குறித்து கோவை புத்தக திருவிழா தலைவர் ராஜேஸ், கொடிசியா தலைவர் ரங்கசாமி ஆகியோர் கூறியதாவது:
இளம் தலைமுறையினர் இடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும், புத்தக வாசிப்பாளர்கள் பயனடையும் வகையில் கொடிசியா சார்பில் 10வது ஆண்டாக புத்தக கண்காட்சி கொடிசியா அரங்கில் வரும் வெள்ளிக்கிழமை துவங்குகிறது. மாலை 6 மணிக்கு நடக்கும் துவக்க விழாவில் கோவை மண்டல வருமான வரி கூடுதல் ஆணையர் ராணி காஞ்சனா பங்கேற்று கண்காட்சியை துவங்கி வைக்கிறார்.
இந்த கண்காட்சியில் தமிழ்நாட்டை சேர்ந்த புத்தக பதிப்பாளர்கள் மட்டுமின்றி கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மராட்டியம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புத்தக பதிப்பாளர்கள் கலந்து கொண்டு 400க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கின்றனர். இதனை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்.
கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும், கண்காட்சியை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள், இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் நடத்தப்படுகிறது.
இதன்படி வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் இளம்படைப்பாளர்களுக்கான விருது வழங்கும் விழாவும், 18ம் தேதி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி, இளம் எழுத்தாளர் பயிற்சி பட்டறை நடக்கிறது. இதேபோல், ஒவ்வொரு நாளும் நிகழச்சிகள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனை தொடர்ந்து அவர்கள் புத்தக கண்காட்சி மலரை வெளியிட்டனர்.
உடன் கண்காட்சி துணை தலைவர் முத்துக்குமார் கொடிசியா செயலாளர் விஜய் ஆனந்த் உள்ளிட்டோர் இருந்தனர்.
