Coimbatore corporation: கூலி கேட்டு கொசு ஒழிப்பு தொழிலாளர்கள் போராட்டம்…

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மலேரியா, டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 910 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கும், சிறப்பு தூய்மை பணியாளர்களுக்கும் கடந்த 3 மாதங்களாக 20ம் தேதிக்கு பிறகுதான் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்ததும் பலன் இல்லை. இதேபோல், கொசு ஒழிப்பு பணியாளர்கள், சிறப்பு தூய்மை பணியாளர்களுக்கு இந்த மாதமும் 15 நாட்களை கடந்தும் இன்னு சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது.

இதனால் அவர்கள் வீட்டு வாடகை, மளிகை செலவு, மருத்துவ செலவு உள்ளிட்ட குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் சிறப்பு தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பாரதீய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்கத்தின் தூய்மை பணியாளர்கள் பிரிவு சார்பில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் இன்று மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்க மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்தனர்.

பின்னர் அவர்கள் மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜாவை சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து கொசு ஒழிப்பு பணியாளர்கள் கூறுகையில், “சம்பளம் முறையாக வழங்காததால் தொடர்ந்து அவதியடைந்து வருகிறோம். ஒப்பந்ததாரர்களிடம் கேட்டால் முறையான பதில் இல்லை. எனவே, மாநகராட்சி கமிஷனர் உடனடியாக நடவடிக்கை எடுத்து 7ம் தேதிக்குள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதேபோல் தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுபணியாளர்கள் சங்கத்தி சார்பில் சம்பளம் வழங்கக்கோரி கொசு ஒழிப்பு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், நேற்றும் 31 மற்றும் 66வது வார்டில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *