கோவையில் 7 ஆண்டு தலை மறைவு கொலை வழக்கு குற்றவாளி கைது
கோவை பேரூர், சுண்டக்காமுத்தூர் வையாபுரி தெருவைச் சேர்ந்த கார்த்திக் (39). இவர் மீது பேரூர் போலீசில் கொலை, கொள்ளை மற்றும் வீட்டில் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி, சுண்டக்காமுத்தூரைச் சேர்ந்த கமலம் (70) என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது, திருடும் நோக்கில் வீட்டுக்குள் புகுந்த கார்த்திக், அவர் கூச்சலிட்டதால் வீட்டிலிருந்த அம்மிக்கல்லால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவர் அணிந்திருந்த 6 கிராம் தங்க கம்மல் மற்றும் செல்போனை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். பின்னர், 2019-ம் ஆண்டு மே 1-ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்த அவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து, அவருக்கு எதிராக பிடியாணை (NBW) பிறப்பிக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக மாவட்டம் தோறும் இடம் மாறி, அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வந்த கார்த்திக்கை கைது செய்ய, பேரூர் தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.
கைதான கார்த்திக் சாமியார் போல் போல் வேடமணிந்து பதுங்கி பல்வேறு இடங்களில் சுற்றி வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட கார்த்திக், கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த கொலை வழக்கு குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
