ஆளில்லாத வீடுகள்… 3 லட்சம் பேரிடம் கைரேகை வாங்க ரேஷன் கடை ஊழியர்கள் தீவிரம்

கோவை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை கார்டுகள் மற்றும் முன்னுரிமையற்ற கார்டுகள் பெற்றுள்ள ரேஷன்கார்டுதார்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் கைரேகை (பயோ மெட்ரிக்) அல்லது கண்கருவிழி பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணியில் அந்தியோதயா அன்ன யோஜனா கார்டு, முன்னுரிமை கார்டு, முன்னுரிமையற்ற கார்டுகள் என 95 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துள்ளது. 3,97,782 ரேஷன் கார்டுகள் விற்பனை முனைய இயந்திரத்தில் பயோ மெட்ரிக் பணிகள் நிலுவையில் இருந்தது.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பயன்பெறும் அனைத்து ரேஷன்கார்டுதாரர்கள் கைரேகை பதிவு விடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை அல்லது அருகே உள்ள ரேஷன் கடைகளில் வரும் 31ம் தேதிக்குள் விரல்ரேகையினை பதிவேற்றம் செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இந்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரேஷன் பணியாளர்கள் வீடு வீடாக சென்று விரல் ரேகை பெற்று வருகின்றனர். கடந்த 2 வாரத்தில் சுமார் 65 ஆயிரம் பேரிடம் விரல் ரேகை பதிவு பெறப்பட்டது.

இந்த பணிகள் முடித்தால் தான் ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டில் இருந்து முழு அளவில் உணவு தானியங்கள் பெற முடியும். எனவே, இந்த பணிகளை தடையின்றி நிலுவையின்றி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளிலும் கைரேகை மற்றும் கண் கருவிழி பதிவு செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கைரேகை பதிவு இல்லாத கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் கடை ஊழியர்கள் ரேகை பதிவுகளை பெற்று வருகின்றனர். பல வீடுகளில் கைரேகை பதிவுகள் கிடைக்கவில்லை. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருப்பதாக தெரிகிறது. மாவட்ட அளவில் இன்னும் சுமார் மூன்று லட்சம் பேரிடம் விரல் ரேகை பதிவு பெற வேண்டி இருக்கிறது.

|இவர்களை தேடி கண்டறிந்து ரேகை பதிவுகளை பெறுவது சவாலாக இருக்கிறது. வெளியூரில் வசிப்பவர்களிடம் எப்படி கைரேகை பதிவு பெறுவது என தெரியாத நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் தவித்து வருகின்றனர். வெளியூரில் வசிக்கும் நபர்களிடம் ரேஷன் கார்டுகளுக்கான விரல் ரேகை பதிவுகளை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

ரேஷன் கடை பணியாளர்கள் விடுமுறை நாட்களில் சென்றால் மட்டுமே விரல் ரேகை பதிவு பெற முடியும். கல்வி நிறுவனங்கள், அலுவலக பணி நேரங்களில் சென்றால் வீடுகள் பூட்டப்பட்டிருப்பதாக கூறி திரும்ப வருகிறார்கள். எனவே அவகாச காலத்திற்குள் பணிகளை முடிக்க தீவிரம் காட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *