பிரிட்டிஷார் கொண்டாடிய வெரைட்டி ஹால் ரோடு…
கோவை போத்தனூரில் ஆங்கிலேயர் காலனி இருந்தது.
அங்கே 400க்கும் மேற்பட்ட ஆங்கிலேயர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். தினமும் இரவில் ஆங்கிலேயர்கள் ஆட்டம், பாட்டத்துடன் ஜாலியாக பொழுது போக்குவார்கள். அவர்களின் இரவு ஆட்டத்திற்கு கோவையில் எங்கேயும் கேளிக்கை விடுதி கிடையாது. அப்போது கோவையில் பிரபலமாக இருந்த வின்சென்ட் சாமிக்கண்ணு (இவர் பெயரில் உக்கடத்தில் ரோடு உள்ளது) ஒரு கேளிக்கை விடுதி கட்டினார்.
அந்த விடுதியில் நடனம், நாட்டியம், நாடகம் நடக்கும். சினிமா பார்க்க ஆங்கிலேயர்கள் விரும்பினால் பெரிய திரை கட்டி படம் காட்டுவார்கள். தினமும் ஒவ்வொரு விதமான கேளிக்கை நடக்கும். ஆங்கிலேயர்கள் சாரட் வண்டியில் வந்து ஜாலியாக ஆடுவார்கள். தினமும் ஒரு ‘வெரைட்டி’ என பொழுது போக்கு நிகழ்ச்சி நடந்தது. இந்த வெரைட்டி நிகழ்ச்சியின் அடையாளமாக அந்த வீதிக்கு வெரைட்டி ஹால் ரோடு என பெயர் வைத்தார்கள்.
பின் நாளில், அதாவது சுதந்திரம் பெற்ற பின் இந்த வெரைட்டி ஹால் முடங்கியது. அதற்கு பிறகு அந்த கட்டுமானத்தில் சில மாற்றம் செய்து ‘டிலைட்’ என்ற சினிமா தியேட்டர் கட்டினார்கள். இது கோவையின் முதல் சினிமா தியேட்டர் என்ற பெருமை பெற்றது.
நூறு ஆண்டுகள் கடந்த இந்த தியேட்டர் தற்போது முடக்கப்பட்டது. வெரைட்டி ஹால் ரோட்டில் பிரதானமான அடையாளமாக பிரிட்டீஷ் பாணி அரண்மனை ஒன்று இருந்தது. இந்த அரண்மனையில் வின்சென்ட் சாமிக்கண்ணு குடும்பத்தினர் வசித்து வந்தனர். அந்த வீட்டின் வேலைப்பாடு, வடிவமைப்புகளை காண மக்கள் கூட்டம் குவியும். நீண்டகாலத்திற்கு பின் அந்த அரண்மனை இடிக்கப்பட்டது.
அரண்மனை கட்டிய இடத்தில் தற்போது வங்கி ஒன்று செயல்படுகிறது. வெரைட்டி ஹால் ரோட்டின் கிழக்கு எல்லையில் ‘எடிசன்’ தியேட்டர் இருந்தது. இந்த தியேட்டரில் ஆரம்ப காலத்தில் நாடகங்கள் அரங்கேறியது. கே.ஆர்.ராமசாமியின் நாடக குழுவினர் இங்கே ஏராளமாக நாடங்களை நடத்தியுள்ளனர். அறிஞர் அண்ணா எழுதிய ஓர் இரவு நாடகம் இங்கே பிரமாண்டமாக திரையிடப்பட்டது.
இந்த நாடகத்தை அண்ணா நேரிடையாக பார்த்து ரசித்தார். பின் நாளில் எடிசன் தியேட்டர் சாமி தியேட்டர் என பெயர் மாறியது. இந்த சாமி தியேட்டர் கால போக்கில் அழிந்து போனது. இந்த பகுதியில் வணிக கடைகள் உருவாகி விட்டது. சுதந்திரத்திற்கு பின் கோவையில் பல்வேறு வீதி, ஊர் பெயர்கள் மாறியது. ஆனால் வரலாற்று சுவடுகளை இழந்தாலும், வெரைட்டி ரோடு என பெயர் மாறாமல் இருக்கிறது.
