கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க தடை
கோவையில் கட்டமைப்பை காரணம் காட்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டத்தை தவெக அரசு முடக்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.
கோவை சிங்காநல்லூர் திறந்தவெளி சிறை வளாகத்தில் 20.18 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது. இதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு கடந்த ஆட்சி காலத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்து பணிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் வந்ததால் திட்ட பணிகளை துவங்கவில்லை. மைதான பணிகள் நடத்த தயாராக இருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிதாக ஆட்சிக்கு வந்த தவெக அரசு சர்வதேச அளவிலான கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதில் ஆர்வம் காட்டவில்லை. ஸ்டேடியம் மட்டுமின்றி வேறு எந்த விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளிலும் இந்த அரசு ஆர்வமாக இல்லை.
திமுக அறிவித்த திட்டம் என்பதற்காக கிரிக்கெட் மைதானம் உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டது, சிறை வளாகத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைத்தால் பார்க்கிங் இட வசதி சரியாக இருக்காது. மேறும் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. இந்த நிலையில் சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே 170 கோடி ரூபாய் செலவில் திருச்சி ரோட்டில் மேம்பாலம் கட்டும் பணி துவக்கப்பட உள்ளது. இந்த பணி இரண்டு ஆண்டுகளுக்கு நடக்க உள்ளது.
இந்த நிலைமையில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைத்தால் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிடும் என அதிகாரிகள் திட்டத்தை தள்ளி வைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கிரிக்கெட் மைதானம் அமைத்தால் போதுமான சாலை கட்டமைப்பு இல்லாமல் போனால் பிரசனை ஏற்படும். மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் இருந்து இதற்கு தனியாக ஒரு சாலையை ஏற்படுத்த வேண்டும்.
அந்த வழியாக வாகனங்கள் சென்றுவர வழிவகை செய்ய வேண்டும்.
ஏற்கனவே கோவை சர்வதேச விமான நிலையத்தில் இட பிரச்னை இருக்கிறது. விரிவாக்க பணிகள் முடங்கி போய் இருக்கிறது.
நல்ல ரோடு இருந்தால் தான் கிரிக்கெட் ஸ்டேடியம் சென்று வர மக்களுக்கு ஏதுவாக இருக்கும். கோவை நகரில் உள்ள மக்கள் தொகை வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் பார்வையாளர்கள் வசதிக்கான திட்டங்கள் சிங்காநல்லூர் வட்டாரத்தில் ஏதுமில்லை. திருச்சி ரோட்டில் வாகனங்கள் சென்று வருவதற்கான போதுமான கட்டமைப்பு வசதிகள், இதர அடிப்படை வசதிகள் உருவாக்கப்படவில்லை.
இதை காரணம் காட்டி மைதானம் உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. இதர பகுதிகளில் கிரிக்கெட் மைதானம் உருவாக்கவும் தவெக அரசு ஆர்வம் காட்டவில்லை. திட்டத்தை முடக்கினால் போதும் என செயல்படுவதால் கிரிக்கெட் ரசிகர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
