குவிந்து கிடக்கும் அஸ்தி, சடங்கு கலயங்கள்…!
கோவை சொக்கம்புதூர் பகுதியில் மாநகராட்சியின் மின் மயானம் உள்ளது. இந்த மயானம் வளாகத்தில் இருந்த சுற்றுச்சுவர் பழுதடைந்து இடிந்து விழுந்து விட்டது.
இந்த பகுதியில் பாதையை ஒட்டி ஏராளமான அஸ்தி பானைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திய மற்றும் பயன்படுத்தாத அஸ்தி கலயங்கள் தூக்கி வீசப்பட்டுள்ளது. குப்பை குவியல்களுக்கு இடையே காணப்படும் இந்த கலயங்களை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிலர் அஸ்தி கலயங்களை வாங்கிச் செல்லாமல் விட்டுவிட்டதாலும், ஏற்கனவே பயன்படுத்திய அஸ்தி கலயரங்களை வெளியேற்றாமல் விட்டு விட்டதாலும்,
மயானத்தில் சடங்கு செய்த போது பயன்படுத்திய மண் பானகைளும் குவிந்து கிடப்பதாக தெரிகிறது.
இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் கூறுகையில், “இங்கே மின் மயானம் மட்டுமின்றி சுடுகாடும் இருக்கிறது. சிலர் சடலங்களை இங்கே புதைக்கிறார்கள். மின் மயானத்தில் சடலங்களை தகனம் செய்த பின்னர் அஸ்தியை சிறு பானைகளில் வழங்குகிறார்கள்.
அதை வாங்கி செல்லும் சிலர் அருகே உள்ள குளத்திலும் கரைக்கிறார்கள். அந்தப் பானைகளை மின் மயானத்தை ஒட்டி உள்ள காலியிடங்களில் போட்டு செல்கிறார்கள். மயானத்தில் சடங்கு செய்த போது பயன்படுத்தும் பானைகளையும் வீசி செல்கிறார்கள். இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த பகுதியில் அஸ்தி கலயங்களை போடாமல் தடுக்க வேண்டும். மாநகராட்சியினர் இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும், ” என தெரிவித்தனர்.
