தெரு நாய் தொல்லை… வண்டியோடு சுத்தும் கோவை மாநகராட்சி…
கோவை மாநகர பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக உக்கடம், கரும்புக்கடை, சிங்காநல்லூர், குனியமுத்தூர்,ராமநாதபுரம், புலியகுளம், சரவணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.
இதன் காரணமாக, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் பணிக்கு செல்வோரை நாய்கள் கூட்டமாக துரத்துவது வாடிக்கையாக உள்ளது.
மாநகரில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாய்களைப் பிடிக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டது. ஒரே மாதத்தில் 500க்கும் மேற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் கிழக்கு மண்டலத்தில் 24,404 நாய்கள், வடக்கு மண்டலத்தில் 22,069, (தெற்கு மண்டலத்தில் 31,499 நாய்கள், மத்திய மண்டலத்தில் 11,017 நாய்கள், மேற்கு மண்டலத்தில் 22,085 நாய்கள் என மொத்தம் 1,11,074 நாய்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 66.2 சதவீதம் ஆண் நாய்கள், 33.8 சதவீதம் பெண் நாய்கள் என தெரியவந்துள்ளது.
கருத்தடை செய்யப்படுவதால், நாய்களின் வேகம், ஆக்ரோஷம் குறைந்து, மக்களுக்கு அந்த நாய்களால் தொல்லை ஏற்படாது என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நகரில் நாய்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, நாய்களைப் பிடித்து, கருத்தடை மேற்கொள்வதே சிறந்த வழியாக உள்ளது. ரேஸ்கோர்ஸ், உக்கடம் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் 70 நாட்கள் பிடிக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் 30 நாய்கள் பிடிபட்டன.
இந்த நாய்களின் அட்டகாசம் தொடர்பாக நோயாளிகள் புகார் தெரிவித்த பின்னர் குழைந்தைகள் வார்டு, பிரசவ வார்டு, எலும்பு முறிவு வார்டின் முன் இருந்த நாய்கள் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்வதற்காக பிடிக்கப்பட்டன. பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் பகுதிகளில் அதிக நாய்கள் சுற்றுகின்றன.பள்ளிக்கூடம், பஸ் ஸ்டாப் பகுதிகளிலும் தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
