மோசடி நபரை போலீசார் விசாரிக்கலை… ஆதிவாசி பெண்கள் புகார்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாம் இன்று நடந்தது.
இதில் காரமடை கோபநாரி தோலம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆதிவாசி பெண்கள் முற்றுகையிட்டு குவிந்தனர். அப்போது அவர்கள் அளித்த புகார் மனுவில், ” எங்கள் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் எங்களிடம் நட்பாக பழகினார். அவர் எங்களிடம் தனித்தனியாக பணம் நகை வாங்கினார். சில நாட்களில் திருப்பி தருவதாக கூறி அவர் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் என பலரிடம் பணம், நகை வாங்கினார்.
40க்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர் இப்படி பல லட்ச ரூபாய் வாங்கி ஏமாற்றி விட்டார். எங்களிடம் வாங்கிய நகையை அடமானம் வைத்து அவர் பணம் வாங்கி ஜாலியாக செலவு செய்து வருகிறார். இது தொடர்பாக காரமடை போலீசில் புகார் அளித்தோம். போலீசார் மோசடி நபர் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கவில்லை. மாறாக எங்களை கேலியாக, கிண்டலாக பேசுகிறார்கள்.
மலை கிராம ஆதிவாசிகள் என அவர்கள் ஏளனமாக நடக்கிறார்கள். ஏற்கனவே இந்த மோசடி தொடர்பாக 2 முறை புகார் மனு அளித்தோம். ஆனால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்த அதிகாரியும் விசாரிக்கவில்லை. இனியும் அலட்சியம் காட்டாமல் பணம், நகையை மீட்டு எங்களை காப்பாற்ற வேண்டும்,என தெரிவித்தனர்.
அன்னூர் வடக்கலூர் பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் அளித்த புகார் மனுவில், “ இதே பகுதியில் எனக்கு சொந்தமான விவசாய இடம் உள்ளது. இந்த இடத்தை அளந்து பட்டா, சிட்டா, அடங்கல் வழங்க வேண்டும் என நான் கோரிக்கை விடுத்தேன். கடந்த 25 ஆண்டாக நிலம் அளவீடு செய்த தர விண்ணப்பித்து | வருகிறேன்.
ஆனால் அளவீடு செய்து தர மறுக்கிறார்கள். பொய்யாக நிலம் அளக்கப்பட்டது என தகவல் அறியும் சட்டத்தில் விவரம் தெரிவித்திருக்கிறார்கள். ஒரு காலையில் நிலம் அளந்து விட்டு இன்னொரு காலை பகுதியில் நிலம் அளவீடு செய்யவில்லை. நில அளவைத்துறையினருக்கு நிலம் அளக்க உத்தரவு வழங்க வேண்டும். நீண்ட காலம் நான் புகார் மனு தந்து காத்திருக்கிறேன். மாவட்ட நிர்வாகம் மனது வைக்க வேண்டும்,” என்றார்.
மருதமலை அடிவாரத்தை சேர்ந்த முருகன் (70) அளித்த மனுவில், ” எனக்கு சரியாக கண் தெரியாது. விபத்தில் என் இரு கால்களும் செயல் இழந்து விட்டது. வேலைக்கு செல்ல முடியாமல் என் மனைவியை காப்பாற்ற முடியாமல் தவிக்கிறேன். எனக்கு முதியோர் உதவி தொகை வழங்க வேண்டும், ” என தெரிவித்துள்ளார்.
