நடிகர் ராம் சரணுக்கு கோவையில் ஆபரேஷன்
கோவை தனியார் மருத்துவமனையில் நடிகர் ராம் சரணுக்கு வலது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் சரண். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான இவர் பெத்தி என்ற திரைப்படத்தில் நடித்தார் அப்போது சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் அவரது வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.
இந்த காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 26-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு டாக்டர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இந்த சிகிச்சையின் போது நடிகர் சிரஞ்சீவி, சுரேகா கொனிடேலா மற்றும் ராம் சரணின் மனைவி உபாசனா கொனிடேலா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர். இந்நிலையில், ராம்சரணுக்கு சிக்கலான மணிக்கட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்து இருப்பதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும், தற்போது மருத்துவமனையின் கண்காணிப்பில் இருந்து வரும் ராம்சரண் 30ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, அறுவை சிகிச்சைக்கு பின் டாக்டர் குழுவுடன் நடிகர் ராம் சரண் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்நிலையில், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் ராம்சரண் விரைந்து குணமடைய வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
